புதுடெல்லி:
வாக்காளர் அடையாள அட்டையை டிஜிட்டல் மயமாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகமே டிஜிட்டல் மயமாகி வரும் வேளையில் வாக்காளர் அடையாள அட்டையும் விரைவில் இந்தியாவில் டிஜிட்டல் மயமாகவுள்ளது. தேர்தல் ஆணையம் இது குறித்து இறுதி முடிவு எடுத்த பின்னர் வாக்காளர்கள் எளிமையான முறையில் தங்கள் அடையாள அட்டையை டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இதன் மூலம் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டது, அட்டையில் இருக்கும் புகைப்படத் தோற்றம் மாறிவிட்டது என்ற பிரச்சனைகளுக்கே இனி இடமில்லாமல் போய்விடும். இதனிடையே புதிய வாக்காளர்களுக்கு இந்த முறை மிகவும் பயனுள்ளதாகவும், எளிமையான முறையில் அடையாள அட்டையை பெறக்கூடியதாகவும் இருக்கும்.

அதுவும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்கள் மூலமே எளிதாக புதிய வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையை பெற்றுக்கொள்ள முடியும். சரி இந்த புதிய நடைமுறை எப்போது பயன்பாட்டிற்கு வரும் எனக் கேட்கிறீர்களா, அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழகம் உட்பட 5 மாநில சட்டமன்றத் தேர்தலின் போது இதனை நடைமுறைப்படுத்த தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.

வாக்காளர் அடையாள அட்டைகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் தேவையற்ற குழப்பங்கள், முகவரி மாற்றங்கள், பெயர் திருத்தங்கள், உள்ளிட்ட விவகாரங்களை எளிதாக மேற்கொள்ள முடியும். இதனை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது என்பது குறித்தும் அதில் உள்ள சவால்கள் பற்றியும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

விரைவில் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒரு முடிவெடுக்கக் கூடும் என்றும் அதன் பிறகு முறைப்படி அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.