சென்னை: மக்களை தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்த அக்கட்சியின் தலைவர் சீமான்,   எங்களுக்கு ஓட்டு போடுங்க, போடாம போங்க என விரக்தியுடன் பேசினார். தொடர்ந்து பேசியவர்,  ஊழல்வாதிகளுக்கு மட்டும் போடாதீங்க என்று கூறினார்.

மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணிக்கு இணையாக நாம் தமிழர் கட்சியும் 39 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கி உள்ளது.  இதனால் மாநிலத்தில் 4 முனை போட்டி நிலவுகிறது. இந்த நிலையில், விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரித்த சீமான், எனக்கும், எனது தம்பிகளுக்கும் ஓட்டுப் போடுங்கள், போடாமல் இருங்கள். ஆனால், ஊழல் கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள் என கூறினார்.


நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தனி தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இயக்குநர் களஞ்சியத்தை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, “இந்திய நாட்டினை மோடி மற்றும் மன்மோகன்சிங் ஆகிய இருவரும் பத்தாண்டுக் காலம் ஆட்சி செய்துள்ளனர். இந்த இருவரால் எந்த மாற்றமும் நிகழவில்லை.

பதவி, பணம் தான் எனக்கு வேண்டும் என்றால் எப்போதே யாருடனாவது கூட்டணி வைத்து அமைச்சராகி இருப்பேன், எத்தனை கோடிகள் கொட்டி கொடுத்தாலும் வேண்டாம் என்று தெருக்கோடியில் நின்றாவது என் மக்களுக்காகப் போராடுவேன். இன்று வரை போராடிக் கொண்டு தான் இருக்கிறேன்.

கர்நாடகாவில் தண்ணீர் தரமாட்டோம் என்று கூறுகிறார்கள், அவர்கள் அவ்வாறு கூறிய பின்பும், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கூட்டணிக் கட்சிக்காகக் கர்நாடகா மாநிலம் சென்று வருகிறார், ஸ்டாலினின் உருவபொம்மையை அவர்கள் எரிக்கிறார்கள். ஆனால் எரித்தவர்கள் குறித்து திமுக இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. கர்நாடகாவில் உற்பத்தி ஆகும் தண்ணீர் அவர்களுக்குத் தான் என காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கின்றனர். ஆனால் இண்டியா கூட்டணி வைத்து நாட்டினை காப்பாற்றுவோம் என ஸ்டாலின் கூறுகிறார்.

நம் மாநில உரிமைகளைப் பறிகொடுத்தவர்கள் திமுகவினர், நம் மாநில உரிமையைப் பறித்தவர்கள் மத்திய அரசு. மேலும் மத்திய அரசு வரியைச் சுருட்டி எடுத்துக் கொண்டு பேரிடர் காலங்களில் நிதியை முறையாக வழங்குவதில்லை.  தமிழ்நாட்டை மத்திய தொடர்ந்து அரசு வஞ்சிக்கிறது.

மூன்று பக்கமும் கடல் இருக்கிறது, ஆனால் மீன் பிடிக்கும் உரிமை இல்லை, எல்லை தாண்டி மீன் பிடிக்கும் போது சிங்கள ராணுவத்தினர் தாக்குதல் நடத்துகிறான்.

தற்போது ஆட்சியாளர்களின் ஏவல் துறையாக காவல்துறை செயல்படுகிறது. நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்பேற்கும் போது காவல்துறை சுதந்திரமாகச் செயல்படக்கூடிய துறையாக என்னால் கொண்டு வர முடியும்.

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் கலப்பு மொழி கலந்துள்ளதால் தமிழை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

விளங்காத திராவிட மாடல் ஆட்சியை நம் ஆட்சியாக நினைக்க வேண்டாம். நாம் தமிழர் கட்சியின் ஆட்சி சிறப்பாக இருக்கும். இரண்டு தொகுதிகளில் ஒருவர் போட்டியிடுவதையும், எம்எல்ஏவாக இருந்து கொண்டு எம்பிக்கு போட்டியிடுவதைத் தடுக்க வேண்டும்.

ஆயிரம் ரூபாய் கொடுப்பதும், இலவசம் கொடுப்பதும் சாதனை இல்லை, ஆயிரம் ரூபாய் பெற வேண்டிய நிலைக்கு நாம் இல்லை என்பதை உருவாக்குவதே சாதனை. ஊழல் லஞ்சத்தை அழிக்கக் கோஷ்டிகளிடையே கூட்டணி வைக்காமல் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.

எனக்கும், எனது தம்பிகளுக்கு ஓட்டுப் போடு போடாமல் போங்கள் ஆனால் ஊழல்வாதிகளுக்கு வாக்களிக்காதீர்கள் வாக்கென்னும் வலிமை மிக்க ஆயுதத்தினை எழுச்சிக்காக ஏந்த வேண்டும்

விழுப்புரத்தில் களஞ்சியத்திற்கு வாய்ப்பளித்துப் போட்டியிட வைத்துள்ளேன். படமெடுத்தால் வருமானம் ஆனால் தேர்தலில் நின்று இனமானத்தை மீட்க வேண்டுமென்று களஞ்சியம் வந்துவிட்டார். மாறுவோம் மாற்றம் கொண்டுவர மைக் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என பிரச்சாரத்தில் சீமான் பாடல் பாடி வாக்கு சேகரித்தார்.