சென்னை:

மிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், “வாக்கு எண்ணிக்கை முறைகேடின்றி நடைபெற உத்தரவிட வேண்டும்”  தி.மு.க சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது தேர்தல் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற உத்தரவிட வேண்டுமென தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கையின்போது உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகளை கட்டாயம் பின்பற்றிட  மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமென தி.மு.க சார்பில், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  இன்று முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 5 நாட்கள் கழித்து ஜனவரி 2ந்தேதி  வாக்கு எண்ணிக்கை  நடைபெற இருக்கிறது. அதுவரை பதிவான வாக்குகள் அடங்கிய வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கவேண்டிய கடமை தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது. அதேபோல வாக்கு எண்ணிக்கையின் போதும், தமிழ்நாடு ஊராட்சித் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டிய கடமையும் தேர்தல் ஆணையத்திற்கு உள்ளது.

ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய நான்கு பதவி இடங்களுக்காக பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஒரே வாக்குப் பெட்டியில் வாக்காளர்களால் போடப்பட்டு, அவை வாக்கு எண்ணிக்கையின் போது தனித்தனியாக பிரிக்கப்பட்டு எண்ணப்பட வேண்டிய நிலையில், அதில் முறைகேடுகள் ஏதும் ஏற்படாத வண்ணம்,

1) தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் விதிமுறைகள், 1995ல் உள்ள விதிகள் 60 முதல் 69 வரையில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் முழுவதும் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என்றும்;

2) வாக்கு எண்ணிக்கை முடியும் வரை உரிய காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமென்றும்;

3) சிசிடிவி கேமரா மூலம் அனைத்து நடைமுறைகளையும் முழுமையாக கண்காணிக்க வேண்டுமென்றும்;

4) வாக்குப் பெட்டிகளை, வாக்குகள் எண்ணும் வரை உரிய பாதுகாப்புடன் வைத்திட வேண்டுமென்றும்;

5) அப்படி பாதுகாப்புடன், வாக்குப் பெட்டிகள் வைக்குமிடத்தில் வேட்பாளர் அல்லது முகவர் பாதுகாப்பிற்காக அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக காவல்துறை தலைவர், அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோர்களுக்கு மேற்கூறிய உத்தரவுகளை பிறப்பிக்கப்பட வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.