சென்னை,
தேர்தலின்போது ஓட்டு பணம் கொடுப்பது நாடுமுழுவதும் தற்போது வாடிக்கை யாகி வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியின்போது, மதுரை திருமங்கலம் தொகுதி இடைத் தேர்தலின்போது, திமுகவின் அப்போதைய தென்மண்டல செயலாளர் அழகிரி முதன்முதலாக, ஓட்டுக்கு வெளிப்படையாக பணம் கொடுத்து வெற்றிபெறச் செய்தார். இது அரசியலில் ‘திருமங்கலம் பார்முலா’ என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இதுபோன்று ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டு வரப்படும் என தேர்தல் கமிஷனும், மத்தியஅரசும் அறிவித்து உள்ளது.
இந்நிலையில் பாமக தலைவர் ராமதாஸ், ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு தண்டனை விதிக்கும் சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் கோரி உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்களில் ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களைக் கொடுப்பதையும், வாங்கு வதையும் பிடியாணையின்றி கைது செய்யக்கூடிய குற்றமாக அறிவிக்கவும், இதற்கு அதிகபட்சமாக 3 ஆண்டு கள் சிறை தண்டனை விதிக்கவும் வசதியாக சட்டத்திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கதாகும்.
இந்தியாவில் ஜனநாயகத்தை நிலை நிறுத்தும் கருவியாக திகழ்வது தேர்தல்கள் தான். ஆனால், தேர்தல் களம் வாக்குகளை விலை கொடுத்து வாங்கும் சந்தை யாக மாறியிருப்பது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத் திருக்கிறது. தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாச்சாரத்திற்கு முடிவு கட்டும் வகையில் தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளும்படி பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதுதொடர்பாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இருமுறை சந்தித்து பேசினார். அதையேற்று மொத்தம் 47 வகையான தேர்தல் சீர்திருத்தங் களை மேற்கொள்ள ஆணையம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான பரிந்துரைகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் ஜைதி உறுதி யளித்திருந்தார்.
அதன்படி தேர்தல் ஆணையம் அனுப்பிய பரிந்துரைகளில் ஒன்றை ஏற்று தான் வாக்குக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் புலப்படக் கூடிய குற்றமாக அறிவிப்பதற்கான சட்டத் திருத்த முன்வரைவு தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்திருத்த முன்வரைவு மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. மொத்த முள்ள 29 மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புதல் அளித்த பிறகு இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் முழுமையாக இல்லாவிட்டாலும் கூட, ஓரளவாவது கட்டுப்படுத்தப்படும். எனவே, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்கான குற்றவியல் சட்டத்திருத்த மசோதாவை வரும் 9-ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கைக் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தில் தாக்கல் செய்து உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் ஜனநாயகத்தை பாதுகாக்க மேற் கொள்ள வேண்டிய நடவடிக்கை களில் ஓட்டுக்கு பணம் தருவதை தடுக்க வேண்டியது முக்கியமான ஒன்றே தவிர, அதன் மூலமாக மட்டும் ஜனநாயகத்தை பாதுகாக்கவோ, தேர்தல் முறை கேடுகளை தடுக்கவோ முடியாது. தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் வாரி இரைக்கப் பட்டது; இதுதொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இரு தொகுதிகளின் தேர்தல்களும் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தேர்தல்கள் கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்டன.
அப்போதும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை வாரி இரைத்தன. ஆனால், அதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. பொதுத்தேர்தலின் போது ஒத்திவைக்கப்பட்டதைப் போல இப்போது இடைத் தேர்தலை ஒத்திவைக்காதது ஏன்? என்று கேட்டபோது, அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என ஆணையம் கூறிவிட்டது. பொதுத்தேர்தலின் போது அரசியல் சட்டத்தின் 324- ஆவது பிரிவை பயன்படுத்தி தேர்தலை ஒத்தி வைத்தோம்; எல்லா நேரத்திலும் அப்பிரிவை பயன்படுத்த முடியாது என ஆணையம் கூறிவிட்டது.
தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டால், உடனடியாக தேர்தல் ஒத்தி வைக்கப்படும் என்ற நிலை இருந்தால் வாக்காளர்களுக்கு பணம் தர அரசியல் கட்சிகள் அச்சப்படும். இதற்கேற்ற வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமின்றி, தேர்தல் அதிகாரிகளாக வெளிமாநில அதிகாரிகளை நியமிப்பது, தேர்தல் அட்டவணை வெளியிடப்பட்ட பிறகு கருத்துக்கணிப்புகளை வெளியிட தடை விதிப்பது, தேர்தலுக்கு 6 மாதங்கள் முன்பிலிருந்தே ஊடகங்களில் அரசு விளம்பரங்களை வெளியிட தடை விதித்தல் உள்ளிட்ட சீர்திருத் தங்களையும், தேர்தல் ஆணை யம் பரிந்துரைத்துள்ள 47 சீர்திருத்தங்களையும் நடைமுறைப் படுத்துவதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு முன்வர வேண்டும்.
இந்திய ஜனநாயகத்தை தேர்தல் ஊழல் என்ற புற்றுநோய் வேகமாக அரித்து வரும் நிலையில், அதை தடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். எனவே, இனியும் தாமதிக்காமல் தேர்தல் சீர்திருத்தங்களை செயல்படுத்து வதற்கான சட்டத்திருத்தங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.