சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று தீவரமடைந்து வருகிறது. பல இடங்களில் முழுமையாக மூடப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.  கொரானா தொற்று உள்ள பகுதிகளில் 2 கி.மீ. தூரத்துக்கு உணவு வழங்க தடை விதிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி சென்னை மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட பகுதிகள் அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கொரோனா தொற்று நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் தொற்று நோய் சிகிச்சை வழங்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளுக்கு அருகிலுள்ள 2 கி.மீ. சுற்றளவுக்குட்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

உதவிகள் வழங்கும் போது கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகமூடி, கையுறை மற்றும் சமூக இடைவெளியுடன் வழங்குவது அவசியமாகிறது.

தன்னார்வலர்கள் கீழ்க்கண்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

அதன்படி,

தொற்று நோய் கண்டறியப்பட்டு சென்னை மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட பகுதிகள், ஆபத்தான பகுதிகள் (ஹாட் ஸ்பாட்) ஆதலால் அப்பகுதியினை சுற்றி 2 கி.மீ. சுற்றளவுக்கு உட்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கொரோனா தொற்று நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் தொற்று நோய் சிகிச்சை வழங்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்ற இடங்கள் ஆபத்தான பகுதிகள் ஆதலால் மேற்கண்ட மருத்துவமனைகள் அருகிலுள்ள 2 கி.மீ. சுற்றளவுக்கு உட்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேற்கண்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க வேண்டுமென்றால் சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிடங்குகளில் உணவு பொருட்களை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவ்விதம் பெறப்படும் உணவுப்பொருட்கள் முறையான உணவு பரிசோதனை மேற்கொண்ட பின் மாநகராட்சி மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும்.

உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* உணவு வழங்கும் இடம் மற்றும் இதர விவரங்களை மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

* மண்டல அலுவலர், உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு வழங்கும் இடத்தினை ஆய்வு செய்து அவ்விடம் உணவு வழங்க உகந்த இடம் என கண்டறியப்பட்ட பின்னர் தான் உணவு வழங்க வேண்டும்.

* எந்த மண்டலத்திற்கு உட்பட்ட இடத்தில் உணவு வழங்க இருக்கிறார்களோ அந்த மண்டல எல்லைக்குட்பட்ட இடத்திலேயே உணவு தயாரிக்கப்பட வேண்டும்.

* தயாரிக்கப்பட்ட உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள் அமைப்பாளர்கள் வழங்கி முடிக்க வேண்டும்.

* உணவு வழங்குமிடத்தில் ஓட்டுனர் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி, தன்னார்வ அமைப்பு, அரசு சாரா அமைப்புகள், குழுவினர் உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

* உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில், 3 நபர்களுக்கு மேல் பயணிக்கக் கூடாது.

* உணவு வழங்கும் போது, சமூக இடைவெளியினை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

* மேற்கண்ட நிபந்தனைகளுடன் அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி உணவு வழங்கப்பட வேண்டும்.

* இவை தவிர, அரசு மற்றும் சென்னை மாநகராட்சியால் உணவு வழங்குதல் குறித்து அவ்வப்போது விதிக்கப்படும் நிபந்தனைகளையும் உணவு வழங்கவுள்ள அமைப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டுள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.