சென்னை

குரல் பரிசோதனை என்பது சட்ட விரோதம் இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் குரல் பரிசோதனை பற்றி இரு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டன.  அந்த வழக்குகளில் குரல் பரிசோதனை என்பது சட்ட விரோதம் என எதிர் தரப்பில் வாதம் வைக்கப் பட்டது. முன்பு வேறு ஒரு வழக்கில் கட்டாயப் படுத்தி குரல் மாதிரியை வாங்கியதை நீதிபதி ஜெயசந்திரன் கண்டித்ததை அந்த தரப்பு சுட்டிக் காட்டியது.  இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி உள்ளது.

”கையெழுத்து பரிசோதனை சட்ட பூர்வமானது.  ஒரு வழக்கில் கையெழுத்து மாதிரி இல்லாமல் குரல் மாதிரி இருக்கும் போது குரல் பரிசோதனை சட்ட விரோதம் ஆகாது.  ஒரு பரிசோதனைக்காக குரல் மாதிரியை எடுப்பதில் தவறில்லை.   கை ரேகை எப்படி உடல் பரிசோதனை ஆகிறதோ அதே போல குரலும் ஒரு வகையான பரிசோதனையே.   அந்தக் குரலின் அலைகளை அளந்து அதை பரிசோதிப்பதால் அதையும் ஒரு உடல் பரிசோதனை என சொல்லலாம்.

குரல் மாதிரி எடுப்பதினால் எந்த ஒரு உடல்ரீதியான துன்பமோ அல்லது மன ரீதியான துன்பமோ ஏற்பட வாய்ப்பே இல்லை.  ஆனால் ஒவ்வொரு வார்த்தைக்கும் உணர்ச்சி மாறுபட வாய்ப்பு உண்டு.  எனவே சந்தேகத்துக்குரிய வார்த்தைகளை பேச வைத்து அதைக் குரல் பரிசோதனைக்கு உட்படுத்துவது தவறில்லை.” என தீர்ப்புகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.