புதுடெல்லி: விண்டீஸ் அணியின் கிரிக்கெட் பிரமாதமானதாக இருந்தது! இதுவொரு அருமையான வெற்றி மற்றும் உயர்தர கிரிக்கெட்டை அந்த அணி வெளிப்படுத்தியது என்று இந்திய கேப்டன் விராத் கோலி புகழ்ந்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், இங்கிலாந்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை ஜேஸன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி வென்றதையடுத்து, விராட் கோலி, விவியன் ரிச்சர்ட்ஸ் உள்ளிட்ட கிரிக்கெட் பிரபலங்கள் விண்டீஸ் அணியைப் புகழ்ந்து பதிவிட்டுள்ளனர்.
விராட் கோலி தன் ட்விட்டர் பக்கத்தில், “வாவ்! விண்டீஸ் கிரிக்கெட்; வாட் எ வின். உயர் தர கிரிக்கெட்” என்று விதந்தோதியுள்ளார்.
விண்டீஸ் அணியின் முன்னாள் அதிரடி வீரர் விவ் ரிச்சர்ட்ஸ், “இடைவெளிக்குப் பிறகு முதல் டெஸ்ட் எங்களுக்குரியதானது. வாழ்த்துக்கள் வீரர்களே. எங்களைப் பெருமையடையச் செய்து விட்டீர்கள்” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் தன் பக்கத்தில், “இரு அணிகளுமே நல்ல பன்முகத் திறமையை வெளிப்படுத்தினர். பதற்றமான சூழலில் ஜெர்மைன் பிளாக்வுட் முக்கியமான ஒரு இன்னிங்ஸை ஆடிவிட்டார். முக்கியமான இந்த வெற்றி தொடரை அருமையான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது” என்றார்.
மைக்கேல் வான், “டெஸ்ட் கிரிக்கெட்டின் மிகச்சிறந்த வாரம் இது. இந்தக் காலக்கட்டத்தில் இங்கு வந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி அபாரம். பிரமாதமாக ஆடி வெற்றியும் பெற்றது நம்ப முடியாதது” என்றுள்ளார்.