ஒரு திரைப்படத்தின் இசை அல்லது டீசர் அல்லது டிரைலர் வெளியீட்டு விழா எந்த அளவிற்கு தனித்துவமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றதோ, அந்த அளவிற்கு அந்த படத்தின் கதைக்களமும் வலுவானதாக இருக்கக்கூடும் என்பது தான் ரசிகர்களின் கணிப்பு…. அந்த வரிசையில் தற்போது இணைந்திருக்கிறது ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா தயாரித்து, அறிமுக இயக்குநர் சாய்பரத் இயக்கி இருக்கும் ‘ரம்’ திரைப்படம்…’வி ஐ பி’ புகழ் ஹ்ரிஷிகேஷ், ‘சூது கவ்வும்’ புகழ் சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் மற்றும் விவேக் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘ரம்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 2.11.2016 (புதன்கிழமை) அன்று சென்னையில் உள்ள ‘ஹயாட்’ ஹோட்டலில் விமர்சையாக நடைபெற்றது.
பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, முன்னணி தயாரிப்பாளர்களுள் ஒருவரான ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா, எழில்மிகு காட்சிகளை யதார்த்தமாக படமாக்கும் ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா மற்றும் நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், நடிகர் ஆதவ் கண்ணதாசன், சென்னை 2 சிங்கப்பூர் படத்தின் கதாநாயகன் கோகுல் ஆனந்த் ஆகியோரும், ரம் திரைப்படத்தின் படக்குழுவினர்களான தயாரிப்பாளர் ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திரா, இயக்குநர் சாய் பரத், இசையமைப்பாளர் அனிரூத், ஹ்ரிஷிகேஷ், சஞ்சிதா ஷெட்டி, நரேன், விவேக், அம்ஜத், அருண் சிதம்பரம், பாடகர் சிட் ஸ்ரீராம், பாடலாசிரியர்கள் மதன் கார்க்கி, விவேக் வேல்முருகன் மற்றும் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் வாசு ஆகியோர் பங்கேற்று விழாவை சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
“ரம் திரைப்பட குழுவினரை போன்ற இளம் கூட்டணியோடு பணியாற்றியது, எனக்கு புது உற்சாகத்தை அளித்ததோடு மட்டுமில்லாமல், என்னை மீண்டும் இளமையாகவும் மாற்றி இருக்கின்றது….நம்முடைய இளைஞர்களின் மனதை இசையால் கவருவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…. ஆனால் அதை தன்னுடைய மனதை வருடும் இசையால் செய்திருக்கிறார் அனிரூத். இளையராஜா என்னும் இசை கடலில் கண்டெடுத்த முத்து தான் அனிரூத்…” என்று உற்சாகமாக கூறினார் நடிகர் விவேக்.
“பொதுவாகவே பேய் படங்கள் என்றால் எனக்கு அவ்வளவு பயம்…. அதுமட்டுமன்றி, 13 ஆம் நம்பர் என்பது பேய்களை குறிக்கும் எண் என்பதால், அந்த எண்ணின் மீதும் எனக்கு நயம் தான்….. ஆனால் தற்போது நான் இசையமைத்திருக்கும் இந்த ‘ரம்’, என்னுடைய 13 ஆவது படம்…. அதுவும் பேய் படம்….” என்று கூறுகிறார் இசையமைப்பாளர் அனிரூத்.
“ஒரு திரைப்படத்தை தயாரித்துவிட்டு, அதை வியாபாரம் செய்வது தான் மிகவும் கடினமான காரியம்….ஆனால் அந்த வியாபாரத்தை, தன்னுடைய கடின உழைப்பால் சிறப்பான விதத்தில் செய்து முடித்திருக்கும் இளம் தயாரிப்பாளர் ‘ஆல் இன் பிச்சர்ஸ்’ விஜயராகவேந்திராவை பார்க்கும்பொழுது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….இந்த ரம் திரைப்படம் அமோக வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்…..” என்று கூறினார் ‘ஸ்டுடியோ கிரீன்’ ஞானவேல் ராஜா.