·தமிழக விவசாயிகளின் கடன்களை ரத்து செய்யவும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் 41 நாள்கள்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்திரில் நடைபெற்றது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த உறுதியின் பேரில் அவர்கள், தங்களது போராட்டத்தை ஒத்திவைத்தனர்.   ஆனால், வாக்குறுதி அளித்தபடி அவர்களது கோரிக்கைகளை எடப்பாடி நிறைவேற்றவில்லை. ஆகவே சில நாட்களுககு முன் சென்னை சேப்பாக்கத்தில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்தினர்.

அப்போது முதல்வர், கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை ஒரு மாதத்தில் அளிக்கப்படும்  என்று  உறுதி அளித்தார். அதன் பேரில்  போராட்டம் திரும்பப்பெறப்பட்டது.

முன்னதாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தியபோது விஷால், பிரகாஷ்ராஜ் உட்பட  சில சினிமா நட்சத்திரங்கள் டில்லிக்குச் சென்று தங்களது ஆதரவை அளித்தனர்.

இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தலைவர் விஷால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், “உ.பி., மகராஷ்டிரா, பஞ்சாப் போன தமிழகத்திலும் விவசாயிகள் கடனை ரத்து செய்யவேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

இதெல்லாம் ஓகேதான்..

ஆனால், அக்கடிதத்தில் “உ.பி., மகராஷ்டிராவை தமிழகத்தின் அண்ட மாநிலங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நெட்டிசன்கள், “அம்பலத்துக்கு வந்த விஷாலின் நாலேஜூ” என்று தலைப்பிட்டு அவரை கிண்டலடித்து வருகிறார்கள்.

“தமிழகத்தின் அண்ட மாநிலங்கள் கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகியவைதான். ( பண்டிச்சேரி யூனியன் பிரதேசமும் இந்த வரிசையில் வரும்.)  தமிழகத்தின் அண்டை மாநிலங்கள் எவை என்பதே தெரியாமல், இவர் தமிழக  ஜீவாதாரப்பிரச்சினையைப் பற்றி பேசுகிறாரே” என்று விஷாலை கலாய்க்கிறார்கள், நெட்டிசன்கள்.