சென்னை கே.கே நகரில் அமைந்துள்ள பத்மா சேஷாத்திரி பால பவன் தனியார் பள்ளியில் பயிலும் மாணவிகள், தங்களின் ஆன்லைன் வகுப்பில் ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுப்பதாகப் புகார்கள் அளித்துள்ளனர்.

இதையடுத்து அவர் தற்போது போலீஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கிறார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த விவகாரம் தொடர்பாக விஷால் தனது ட்விட்டர் பதிவில் :

பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் செய்த பாலியல் தொல்லை என்னைக் குறுகச் செய்கிறது. அந்தப் பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைத்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோர்களிடம் ஒருவரும், ஒருமுறை கூட மன்னிப்பு கோரவில்லை. இதுபோன்ற குற்றங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என் நண்பர், அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதை ஒரு சாதிப் பிரச்சினையாக மக்கள் மாற்றுவது வெட்கக்கேடானது. மாணவிகளுக்குத் தொல்லை கொடுத்த நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி தண்டனை கிடைக்கும் என்பது இனிவரும் காலங்களில் ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தெரியும்.

குறைந்தது இப்போதாவது மாணவர்களிடம் / பெற்றோரிடம் மன்னிப்பு கோருங்கள். இதைச் சாதிப் பிரச்சினையாக மாற்றாதீர்கள்.” என தெரிவித்துள்ளார்.