அங்காள ஈசுவரி திருக்கோயில், மாந்தோப்பு – விருதுநகர் மாவட்டம்.

கன்னிப்பெண்களின் காவல் தெய்வமான அங்காள ஈசுவரி விருதுநகர் மாவட்டம், மாந்தோப்பு கிராமத்தில் வாலகுருநாதசுவாமியுடன் அருள்பாலித்து வருகிறாள். இவளை பார்த்தால் பெற்ற தாயை பார்த்தது போன்ற உணர்வு ஏற்படும். பல நூற்றாண்டுகளாக இத்தலத்தில் அன்னை அருளாட்சி புரிந்து வந்தாலும், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு தான் முறைப்படி கோயில் கட்டி வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இங்கு புள்ளி மான்கள் விளையாடித் திரிந்ததால் “மான்தோப்பு” என அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மாந்தோப்பு ஆனது.

இத்தலத்தில் விநாயகர், வீரபத்திரசாமி, மாயாண்டி, இருளப்பர், இருளாயி, லாடசன்னாசி, சப்தகன்னியர், பேச்சி, காளி, கருப்பர் என 21 பந்தி தெய்வங்களும் அருள்பாலிக்கிறார்கள்.

வைகாசி 4ம்தேதி திருவிழா கொண்டாடப்படுகிறது. இதர விசேட நாட்களிலும் சிறப்பு அபிடேக வழிபாடு நடக்கிறது.

வரதட்சணை கொடுக்க முடியாத நிலை, மகளைக் கடைசி வரை வைத்து பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை, பல கோயில்களுக்கு சென்றும், பரிகாரங்கள் பல செய்தும் திருமணம் ஆகவில்லையே என்ற கவலையில் உள்ள பெற்றோர் இங்கு அங்காள ஈசுவரியை வழிபாடு செய்ய வருகிறார்கள்.

வேண்டுதல் :

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களும், குடும்பப் பிரச்னை உள்ளவர்களும், வழக்குகளில் நியாயத் தீர்ப்பு வேண்டுபவர்களும், தீராத நோய் உள்ளவர்களும், செல்வ வளம் வேண்டுவோரும், சர்ப்ப தோடம், கிரக தோடம் உள்ளவர்களும், சொத்து வாங்க நினைப்பவர்களும் இவளை மனதார வழிபட்டு வந்தால் பிரச்னைகள் தீர்ந்து வாழ்வு வளம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன் :

தங்களது கோரிக்கைகள் நிறைவேறியவுடன் அம்பாளுக்கு திருமுழுக்காட்டு செய்து புத்தாடை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்