சென்னை: ரூ.3 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும்  முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக, தமிழ்நாடு காவல்துறை  லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து உள்ளது. அவரை இன்னும் கைது செய்ய முடியாத நிலையில்,  அதிமுக கட்சியினரிடமும், அதிமுக ஐடிவிங் ஊழியர்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 2 அதிமுகவினரை கைது செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.  ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அவர்மீது  2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் பல வழக்குகள் அடுத்தடுத்து பதியப்பட்டு, அவரை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில்,  கைது செய்யப்படலாம் என அஞ்சிய ராஜேந்திர பாலாஜி, முன்ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை கடந்த 17ஆம் தேதி  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
இதற்கிடையில், தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜியை  கைது செய்ய விருதுநகர் காவல்துறையினர்  8 தனிப்படைகளை அமைத்து தேடி வருகிறது. தனிப்படையினர்,  பெங்களூரு, சென்னை, கேரளா போன்ற பல்லேறு பகுதிகளில் அவரைத் தேடி வருகின்றனர். மேலும் அவரது வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளதுடன், அவர் வெளிநாடு தப்பிவிடாமல் தடுக்கும் வகையில் லுக்அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், விருதுநகர் காவல்துறையினர் இன்று  அதிமுக ஐடி பிரிவு துணைச்செயலாளர் விக்னேஸ்வரன், இளம்பெண் பாசறை செயலாளர் ஏழுமலை  உள்பட பலரிடம் காவல்துறையினர், ராஜேந்திர பாலாஜி எங்கே தலைமறைவாக உள்ளார் என விசாரணை நடத்த வருகின்றனர்.
மேலும், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் பதுங்கி இருக்கலாம் என கருதி, அங்கும் தனிப்படை சென்று விசாரணை நடத்தி வருகிறது.
ஏற்கனவே ராஜேந்திர பாலாஜி குறித்து, அவரது தங்கை மற்றும் உறவினர்கள் குடும்பத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், 2 அதிமுகவினரையும் கைது செய்துள்ள நிலையில், மேலும்கட்சியினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.