லண்டன்:
ந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. அடுத்து இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. முதல் டெஸ்ட் ஆகஸ்ட் 4-ந் தேதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய வீரர்கள் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்டனர்.

அதன்பின் அவர்கள் மும்பை ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த தனிமைப்படுத்துதல் 16 நாட்கள் முடிவடைந்த பிறகு இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்திய வீரர்கள் அனைவரும் வருகிற 14-ந் தேதி லண்டனில் ஒன்றுகூடுகிறார்கள். பின்னர் டர்ஹாமுக்கு சென்று பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறார்கள்.

இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 2-வது தவணை கொரோனா தடுப்பூசியை இந்த வாரத்துக்குள் செலுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, பெரும்பாலான இந்திய வீரர்கள் லண்டனிலும் அதை சுற்றியும் உள்ளனர்.

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்தி கொண்ட இந்திய வீரர்கள் அனைவருமே இப்போது 2-வது தவணையை பெற தயாராக உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையே இலங்கைக்கு எதிராக ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியின் 3 வீரர்கள் மற்றும் 4 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுபற்றி இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, நிலைமையை நாங்கள் அறிவோம். இங்கிலாந்து கிரிக்கெட் மற்றும் உள்ளூர் சுகாதார அதிகாரிகள், பாதுகாப்பு நெறிமுறைகளில் மாற்றம் செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவிப்பார்கள். அது உடனடியாக பின்பற்றப்படும் என்றார்.

தற்போது விடுமுறையை கழித்து கொண்டிருக்கும் இந்திய வீரர்களுக்கு லண்டனில் 17-ந் தேதி கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.