நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடி சம்பளம்!! தோணி, பாலிவுட் நட்சத்திரங்களை முந்தினார் கோலி


டெல்லி:
விளம்பரத்தில் நடிக்க அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி உருவெடுத்துள்ளார்.

முன்னாள் கேப்டன் டோனி உச்சத்தில் இருந்தபோது அவர் வாங்கிய சம்பளம் மற்றும் ஹிந்தி நடிகர்கள் ரன்வீர் சிங், ரன்பீர் கபீர் ஆகியோர் விளம்பரங்களுக்கு வாங்கிய சம்பளத்தை விட கோலி அதிகமாக வாங்கவுள்ளார்.

முன்னதாக இவர் ரூ. 2.5 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் பெற்று வந்தார். தற்போது பெப்சி நிறுவனத்துடன் ஏற்படவுள்ள புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ. 5 கோடி சம்பளம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ‘‘வரும் ஏப்ரல் 30ம் தேதி வரை விராட் கோலியுடன் ஒப்பந்தம் உள்ளது. இதை நீட்டிக்க தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்று கார்னர் ஸ்டோன் ஸ்போர்ட் சிஇஒ பன்ட் சஜ்தே தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து வாய் திறக்க பெப்சி கோ நிறுவனம் மறுத்துவிட்டது. ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாக மட்டும் தெரிவித்தது. கடந்த ஆண்டு டோனியுடனான ஒப்பந்தத்தை பெப்சி நிறுவனம் முடிவுக்கு கொண்டு வந்தது. கோலியுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க பெப்சி நிறுவனம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அனைத்து தரப்பு தகவல்களும் உறுதிபடுத்தியுள்ளது.

‘‘பெப்சி தற்போது பலதரப்பு பிரச்னைகளில் சிக்கி தவிக்கிறது. இந்த சூழ்நிலையில் கோலியுடன் ஒப்பந்தத்தை நீட்டிக்கவே விரும்புகிறது’’ என்று பிராண்ட் ஆலோசகர் ஹரிஷ் பிஜூர் தெரிவித்தார். கோலா நிறுவனம் எதிர்பார்க்கும் நேர்த்தியும், பாணியும் கோலியிடம் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ. 5 கோடி சம்பளம் என்ற உச்சத்தை அடையும் போது மதிப்புமிக்க கிரிக்கெட் வீரராக கோலி உலகளவில் திகழ்வார்.

கடந்த பிப்ரவரியில் பூமா நிறுவனத்துடன் ரூ.110 கோடிக்கு 8 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட முதல் விளையாட்டு வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார். இதற்கு முன் 2016ம் ஆண்டில் டஃப் மற்றும் பெல்பஸ் நிறுவனத்துடன் 92.4 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தினார். இது ஹிந்தி நடிகர் சாருக்கான் ஏற்படுத்திய 131.2 மில்லியன் டாலர் என்ற ஒப்பந்தத்திற்கு அடுத்தபடியாக கோலி உள்ளார்.

மேலும், பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அமீர்கானை விட அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக மாறியிருக்கிறார் கோலி.

அதிக வருவாய் ஈட்டியவர்கள் பட்டியலில் சல்மான் கான் முதலிடத்திலும், ஷாரூக் கான் இரண்டாவது இடத்திலும் இருந்தனர். அதை முறியடித்திருக்கிறார் விராட் கோலி. 28 வயதான கோலி இனிவரும் ஒப்பந்தங்களில் நடிக்க, நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி சம்பளம் வாங்க முடிவு செய்துள்ளார். மேலும் நாள் ஒன்றுக்கு 643 முறை விராட் கோலியின் விளம்பரங்கள் தொலைக்காட்சியில் வெளிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னதாக இந்தியாவில் அதிகம் பிரபலமான நட்சத்திரங்கள் பட்டியலில் சல்மான் கான், ஷாரூக் கான், கிரிக்கெட் வீரர் தோனி ஆகியோரை விட, இந்தியாவில் அதிகமானோரால் விரும்பப்படும் நபராக, விராட் கோலி முதலிடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.


English Summary
virat kohli charges rupees 5 crore a day for endorsements ahead of film stars and other cricketers