டெல்லி:

கொரோனா தடுப்பு நடவடிக்கையின்போது மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், இதை கண்டித்தும், தாக்குதல் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாளை (22ந்தேதி) இரவு 9 மணிக்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகள்  மெழுகுவர்த்தி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய்தடுப்பு பணியில் மருத்துவர்களும், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர்.

ஆனால், பல இடங்களில் மருத்துவர்கள் மீது எச்சில் துப்புவதும், நோய் தொற்று இருப்பவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் அவர்களை மருத்துவ சோதனைக்கோ, மருத்துவமனைக்கு அழைக்கவோ செல்லும்போது பல இடங்களில் தாக்குதல்கள் நடைபெறுகிறது.

இந்தியாவில் பல்வேறு இடங்களில் மருத்துவர்கள் மீது வன்முறைகள் நடந்தவண்ணம் உள்ளன.  சமீபத்தில் சென்னையில் கொரோனாவுக்கு  சிகிச்சை அளித்த  இரண்டு மருத்துவர்கள் அதே கொரோனாவுக்கு பலியான நிலையில், அவர்களது உடல்களை புதைக்கக்கூட  அந்த பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததும், உடல்களை எடுத்துச்சென்றவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழகஅரசுக்கு மத்தியஅரசும், அகில இந்திய மருத்துவர்கள் சங்கமும் கடும் எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில், மருத்துவர்கள் மீதான  தாக்குதலை கண்டித்து நாளை இரவு 9 மணிக்கு அனைத்து மருத்துவர்களும் மெழுவர்த்தி ஏற்றுவதாக இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறினால், ஏப்ரல் 23-ம் தேதியை கருப்பு தினமாக அறிவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.