கார்த்திக் – நடராஜன்

சென்னை,

சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை குளோபல் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடராஜனுக்கு நேற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

இந்த சிகிச்சைகாக மூளைச்சாவு அடைந்த இளைஞர் ஒருவரை சென்னை கொண்டுவந்து, அவரிடம் இருந்து உடல் உறுப்புகள் எடுக்கப்பட்டது. இது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சையில் விதிமீறல்கள் நடந்துள்ள என்று தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “நடராஜனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தஞ்சாவூரை சேர்ந்த  இளைஞர் ஒருவரால் உறுப்புகள் தானமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த செயலில் பல்வேறு  உறுப்பு மாற்று விதிகள் பல மீறப்பட்டு அந்த இளைஞரிடம் இருந்து உறுப்புகள் எடுக்கப்பட்டுள்ளது.  இது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எனவே  இந்த சந்தேகங்கள் உடனடியாக  தீர்க்கப்படவேண்டும் என்பது மட்டுமில்லாமல் இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

எந்த மருத்துவமனை ஒருவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என்று அறிவிக்கிறதோ அந்த மருத்துவமனைக்குதான் அவருடைய உறுப்புகளை வாங்குவதற்கு உரிமை உள்ளது.

மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் இளைஞர், எப்படி குளோபல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அதற்கான செலவை யார் கொடுத்தது. எனவே அதுகுறித்து தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும்  தமிழிசை கூறினார்.