சென்னை: ஆளுநரின் விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து,  தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர்  அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் முதல்நாள் கூட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் சட்டப்பேரவைக்கு கரும்புள்ளியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ஆளுநருடன் அவைக்கு வந்திருந்த ஆளுநரின்  விருந்தினர் மீது சட்டப்பேரவையில் உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா பேசுகையில், ஆளுநருடன் வந்த விருந்தினர் சட்டப்பேரவை நடவடிக்கைகளை அவரது செல்போனில் பதிவு செய்தார். இது பேரவை விதிகளின்படி தவறாகும். உடனடியாக அவைக் காவலரிடம் கூறி நடவடிக்கை எடுக்க கூறியிருந்தேன் எனத் தெரிவித்தார்.
உரிமை மீறலுக்கான காரணம் இருப்பதால், தீர்மானத்தை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, உரிமை மீறல் இருப்பதாக கருதுவதால் ஆராய்ந்து அறிக்கை அளிக்க உரிமை மீறல் குழுவுக்கு உத்தரவிடுவதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.