திருச்சி: விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி இன்று திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மற்றும் மாணிக்க விநாயகருக்கு 150 கிலோ மெகா கொழுக்கட்டை படையல் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம்.செய்தனர்.
தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி . கோவை புலியகுளம் பகுதியில் உள்ள 190 டன் எடை கொண்ட முந்தி விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் சந்தன காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும்,16 வகையான வாசனை திரவியங்களால் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது
விநாயகர் சதுர்த்தியை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிள்ளையாரின் முதல் கோவிலான, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் மற்றும் பிரசித்த மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் மற்றும் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில்களில், பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டு வருகின்றனர்.
சிவகங்கை பிள்ளையார்பட்டி கோயிலில் கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கியது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியையொட்டி இன்று அதிகாலையே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு புண்ணிய தீர்த்தங்களால் அபிஷேகம் நடத்தப்பட் நிலையில், சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். மங்கல வாத்தியங்கள் முழங்க, கம்பீரமாக காட்சியளித்த விநாயகருக்கு தேங்காய், பழம், பூ, அருகம்புல் உள்ளிட்ட பொருட்கள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
இதே போல, திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏராளமானோர் வழிபட்டு வருகின்றனர். மேலும், மலை அடிவாரத்தில் உள்ள மாணிக்க விநாயகருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. அப்போது மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படையல் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி மணக்குள விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது விநாயகப் பெருமானை, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். . மேலும், பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டது.
கோவை-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் இன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். திரளான பக்தர்கள் வந்து விநாயகரை வழிபட்டு சென்றனர்.
கோவை புலியகுளத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் நடை வழக்கமான நேரத்திற்கு முன்பாகவே திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விநாயகருக்கு பால், தயிர், இளநீர் உள்பட 16 வகை திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் 190 டன் எடை கொண்ட முந்தி விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் சந்தன காப்பு ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. மேலும்,16 வகையான வாசனை திரவியங்களால் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டது, 40 கிலோ சந்தனத்தில் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகர் முன்பு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்களும் வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவை மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களில் இருந்தும் அதிகளவிலான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விநாயகரை தரித்து சென்றனர். பக்தர்களுக்கு பிரசாதாமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டன.
இதேபோல் கோவை ஒலம்பஸ் பகுதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில், ரேஸ்கோர்சில் உள்ள 108 விநாயகர் கோவில், உப்பிலிபாளையத்தில் உள்ள விநாயகர் கோவில் உள்பட அனைத்து விநாயகர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதுதவிர கோவை மாநகரில் உள்ள கோனியம்மன், தண்டுமாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
மேலும் மாநிலம் முழுவதும் உள்ள விநாயகர் கோவில்களிலும், விநாயர் சிலைகளிலும் கோலாகலமாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.