தீபாவளிக்கு அடுத்ததாக இந்தியா முழுதும் கொண்டாடப்படும் இந்துக்கள் விழா என்றால் அது விநாயகர் சதுர்த்திதான்.
விநாயகர் பிறந்த, ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று இந்த விழா கொண்டாடப்படுகிறது.
இந்தியா முழுதும் கொண்டாடப்பட்டாலும், நாட்டின் இதயமாக கருதப்படும் மும்பையில் இவ்விழா மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதற்கு நீண்ட வரலாறு உண்டு.
மராட்டிய பகுதியை ஆண்ட மாமன்னன் சிவாஜி ஆட்சிக்காலத்தில்தான் தான் இவ்விழாவை கோலாகலமாக கொண்டாட ஆரம்பித்தனர். விநாயகர் சதுர்த்தி என்பது மராட்டிய பகுதியின் தேசிய விழாவாகவும், கலாச்சார விழாவாகவும் கொண்டாடப்பட்டது.
ஆகவேதான் தான் இன்றும் மகாரஷ்ட்ராவில் இவ்விழா முக்கியத்துவம் அளிக்கப்பட்டு கொண்டாடப்பட்டுகிறது.
சத்திரபதி சிவாஜியை தொடர்ந்து, பீஷ்வாக்கள் ஆட்சிக் காலத்திலும் விநாயகர் வழிபாட்டு விழா தேசிய விழாவாக கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதை தொடர்ந்து சுதந்திர போராட்டக் காலத்தில், இந்துமதத்தின் மீது மிகுந்த பற்று கொண்ட இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பாலகங்காதர திலகர் இந்த மராட்டிய தேசிய விழாவை, அதன் எல்லை தாண்டி பரப்பினார். அதாவது ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரானதாக. அதே நேரம், பிற மதத்தினருக்கு எதிரானதாக அப்போதே மாற்றப்பட்டது என்ற கருத்தும் உண்டு. எப்படியாயினும் இவ்விழா அரசியலாக்கப்பட்டது அப்போதுதான்.
அந்த காலகட்டத்தில் மராட்டிய இந்துக்கள் மனதில் பிள்ளையார் ஆழமாக பதிந்தார். இது அளவுக்கு என்பதை அறிய ஒரு சம்பவம்.
மராட்டிய பகுதியில் எலியால் நோய்கள் பெருக.. மக்கள் மாண்டார்கள். ஆகவே எலியை கொன்று பிடித்து வருவோர்க்கு பணம் வழங்கப்படும் என்று அப்போதைய ஆங்கிலேயே அரசு அறிவித்தது. உடனே பாலகங்காரத திலகர், “எலி என்பது விநாயகரின் வாகனம். அதை அழிக்க வெள்ளையர் ஆட்சி சதி செய்கிறது” என்று போராடக் கிளம்ப, அவர் பின்னால் மக்கள் அணிவகுத்தனர்.
தனது உத்தரவை வாபஸ் பெற்றது ஆங்கிலேய அரசு. இந்த போராட்டத்தில் வெற்றி பெற்றதாலேயே பாலகங்காதரருக்கு “லோகமான்ய” என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இதன் பிறகு மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் விநாயகர் சதுர்த்தியை தங்கள் விழாவாக கொண்டாட ஆரம்பித்தனர்.
பிள்ளையார் புராணக்கதைகளில் வருவது போல், தங்கள் வசதிக்கேற்றவகையில் தங்கள் வீடுகளிலேயே களிமண்ணால் பிள்ளையாரை செய்து வைத்து வணங்க ஆரம்பித்தனர்.
நண்பர்கள், சுற்றத்தினர் மற்றும் உறவினர்களுக்கு பலகாரங்களை பகிர்ந்து கொண்டும், ஏழை மக்களுக்கு உணவு, உடை மற்றும் பொருளுதவி வழங்கியும் மகிழ்ந்தனர்.
தமிழகத்தில் இவ்விழா பெரும்பாலும் இந்து மத குடும்ப விழாவாகவே கொண்டாடப்பட்டு வந்தது. வீடுகளில் சாணம் அல்லது களிமண்ணை பிடித்து அதை பிள்ளையாராக உருவகப்படுத்தி வணங்குவர். பிறகு, அந்த உருவத்தை தங்கள் வீட்டு கிணற்றில் அல்லது அருகில் இருக்கும் குளம், ஆறு போன்ற பொது நீர் நிலைகளில் கரைப்பர்.
தெருவுக்குத் தெரு விநாயகர் சிலைகளை வைப்பதோ, குறிப்பிட்ட நாளில் அவற்றை ஒரு சேர எடுத்துச் சென்று பொது நீர் நிலைகளில் கரைக்கும் பழக்கமோ தமிழகத்தில் இருந்ததே இல்லை.
இந்துத்துவ அடிப்படைவாத அமைப்பான “இந்து முன்னணி” தமிழகத்தில் தோன்றிய பிறகுதான், விநாயகர் சதுர்த்தி என்பது தெருவுக்கு வந்தது. கைப்பிடி அளவு சாண பிள்ளையார்கள் வைத்தது போக, ஐம்பதடி அறுபது அடி வரையிலான பிள்ளையார் பொம்பைகள் பிளாஸ்டர் ஆப் பாரிஸில் செய்யப்பட்டு தெருவோரங்களில் வைக்கப்பட்டன. அவற்றுக்கு தினமும் தீப ஆராதனை செய்வது, ஒலிபெருக்கி வைத்து பாடல்களை ஒலிபரப்புவது, இதற்காக வசூல் செய்வது எல்லாம் துவங்கின.
துப்பாக்கி வைத்திருக்கும் விநாயகர், குறிப்பிட்ட அமைப்பின் கொடிகளை வைத்திருக்கும் விநாயகர் உருவங்களும் செய்யப்பட்டு பொது இடத்தில் வைக்கப்பட்டன.
விநாயகர் சிலையைக் கரைக்கும் ஊர்வலங்கள் நடத்தும்போது, மாற்று மத வழிபாட்டுத்தலங்கள் வழியாக செல்வது, அவர்களுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்புவதும் நடக்க ஆரம்பித்தது. பதிலுக்கு மாற்று மதத்தைச் சேர்ந்த அமைப்பினர் பதில் முழக்கம் எழுவது, கல்லெறிவது போன்ற நிகழ்வுகள் நடந்தன. பல இடங்களில் கலவரங்கள் நடக்க, பிள்ளையார் ஊர்வலம் காரணமாக அமைந்ததும் உண்டு.
இதை எளிதில் நாம் உணர முடியும்.
இந்து மதம் சார்ந்த பல விழாக்கள், ஊர்வலங்கள் நடக்கின்றன. பழனி முருகன் கோயில், திருப்பதி வெங்கடாஜலபதி கோயில்களுக்கு பெருமளவு பக்தர்கள் பாதயாத்திரை செல்கிறார்கள். அவ்வப்போது பெரும் மக்கள் திரளுடன் கோயில் கும்பாபிஷேங்கள் நடக்கின்றன. மாரியம்மன் கோயில்களில் பால் குடம் எடுத்து பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பெரும் கூட்டம் செல்வது இன்றும் நடக்கிறது.
இந்த ஊர்வலங்கள் பல, பிற மத வழிபாட்டுத்தலங்கள் வழியாகச் செல்கின்றன. இவை எதனாலும் மத பிரச்சினை வந்ததில்லை.
மத விழாவை முன்னிறுத்தி அரசியல் செய்யும் சிலராலேயே விநாயகர் சதுர்த்தி பிரச்சினைக்குறியதாக மாறியது.
ஆம்.. ஆரம்ப காலத்தில் கடவுளுக்கான விழாவாக இருந்த விநாயகர் சதுர்த்தி, மன்னர் சிவாஜியால் கலாச்சார விழாவாக மாற்றப்பட்டது.. அடுத்து பாலகங்காதர திலகர் இதை தேசிய உணர்வுக்கான விழாவாக மாற்றினார்..
பின்னாட்களில் மக்களை கூறுபோடும் அரசியல் விழாவாக விநாயகர் சதுர்த்தி மாறியது… தமிழகத்திலும்!
மதம் என்பது சரியா, தவறா என்பது அடுத்த கேள்வியாக இருக்கட்டும். அதற்கு முன், “மதத்தில் அரசியல் கலப்பதை அனுமதிக்கலாமா” என்பதே முக்கியமான கேள்வி.
அதற்கான ஒரே விடை: கூடாது என்பதே.
- கட்டுரை: சுந்தரம்