விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஊரக உள்ளாட்சி தேர்தல்  பணியில் ஈடுபட்டிருந்த அரசு பள்ளி ஆசிரியர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 2வது கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்திலும் இன்று tஊரக உள்ளாட்சி பகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அம்மாவட்டத் திற்குட்பட்ட மயிலம் ஒன்றியத்தில், விடூர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அங்கு தேர்தல பணிக்காக நியமனம் செய்யப்பட்ட மணிவாசகம் என்னும் அரசு பள்ளி ஆசிரியர்  இன்று அதிகாலை திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

உயிரிழந்த மணிவாசம் என்ற அந்த ஆசிரியர்  விழுப்புரம் வா.பகண்டை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தவர்.தேர்தல் பணி காரணமாக நேற்று மாலை  விடூர் கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்து தங்கி வாக்குப்பதிவு நடத்துவதற்கான ஏற்பாடுகளை நேற்று செய்து வந்தார்.

நள்ளிரவு 1மணி அளவில் அவருக்கு  திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக  அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரது உடல் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஆசிரியர் மணிவாசம் நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர்.