விழுப்புரம்,
விழுப்புரம் அருகே இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பஸ் டிரைவர், குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கத்தில் இரண்டு தமிழ்நாடு அரசு விரைவு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.இந்த கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து இன்று காலை 11 மணியளவில் சென்னைக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. மதியம் 1.30 மணியளவில் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம் வழுதாவூர் கூட்டுசாலை என்ற இடத்தில் பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது அங்கு தனியார் பஸ் ஒன்று பஸ் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு இருந்தது. அதனால், அரசு பஸ் டிரைவர் பஸ்சை வலதுபுறமாக திருப்பினார். இதனால் பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரை தாண்டி மறுமார்க்கத்தில் உள்ள சாலைக்குள் புகுந்து தறிகெட்டு ஓடியது.
அப்போது எதிரே சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி மற்றொரு அரசு பஸ் வந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்க சென்ற அரசு பஸ் நடுரோட்டிலேயே தலைகுப்புற கவிழ்ந்தது.
இந்த பஸ் மீது மோதிய வேகத்தில் விபத்தை ஏற்படுத்திய அரசு பஸ், சர்வீஸ் சாலையோரமாக இருந்த தடுப்புக்கம்பிகள் மீது மோதி நின்றது.
இந்த கோர விபத்தில் 2 பஸ்களின் முன்பகுதியும் அப்பளம்போல் நொறுங்கியது. மேலும் தலைகீழாக கவிழ்ந்த பஸ்சின் பெரும்பகுதி சேதமடைந்தது. விபத்துக்குள்ளான 2 பஸ்களிலும் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகள் காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்… என கூக்குரலிட்டனர்.
பயணிகளின் அலறல் சத்தத்தை கேட்டு அக்கம், பக்கத்தில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்து, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்ற முயன்றனர்.
அதேபோல், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும் விரைந்து வந்து பஸ்களின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில் விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அனிஷா உசேன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன்நாயர், விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜன், விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகனமுத்து, சுப்பிரமணி மற்றும் போலீசாரும், நெடுஞ்சாலை ரோந்துப்பிரிவு போலீசாரும், விக்கிரவாண்டி சுங்கச்சாவடி ஊழியர்கள் 2 பாதுகாப்பு வேன்களிலும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் படுகாயமடைந்த 50 பயணிகளை மீட்டு 5 ஆம்புலன்ஸ்கள் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி கள்ளக்குறிச்சி அருகே கச்சிராயப்பாளையத்தை சேர்ந்த ஜெயக்குமார் மகன் ரித்தீஷ்சாய் (2) என்ற குழந்தை பரிதாபமாக இறந்தது. மேலும் ஒரு பெண், 3 ஆண்கள் என 4 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் மாவட்ட கலெக்டர் எல்.சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், ராதாமணி எம்.எல்.ஏ. ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று விபத்தில் படுகாயமடைந்தவர்களை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்கள். மேலும் காயமடைந்த பயணிகளுக்கு தகுந்த முறையில் உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
இந்த விபத்தினால் சென்னை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
.இந்த விபத்து குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.