விழுப்புரம்: இரு தரப்பு மோதல் காரணமாக தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன்கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
விழுப்புரம் திரௌபதி அம்மன் திருக்கோயிலை திறக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை வைத்து சிலர் அரசியல் செய்து வருவதாக கூறிய அமைச்சர் சேகர் பாபு, கோவில் கும்பாபிசேகத்துடன் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ளார்.
விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பு தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு இரு தரப்புக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும், அந்த கோவிலுக்குள் அந்த பகுதியில் கடைபிடிக்கப்பட்டு வந்த கட்டுப்பாடுகளை மீறி ஒருதரப்பு கோவிலுக்குள் புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது- இதையடுத்து தமிழ்நாடு அரசு கோவிலை மூடி சீல் வைத்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோவிலை திறந்து விளக்கேற்ற உத்தரவிட்டார். தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே சமூக உறவை ஏஎற்படுத்தி கோவிலை திறக்கவும் கூறினார்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு அந்த கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டு கும்பாபிசேகம் செய்யப்போவதாக அறிவித்து, தொடர்ந்து மூடி வைத்துவந்தது. இது அந்த பகுதி மக்களிடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி வந்தது. பாஜக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த சில தலைவர்கள், திமுக அரசு இந்து மத நம்பிக்கைகளை மதிக்கவில்லை இந்த விவகாரத்தை அரசியல் களமாக பயன்படுத்தி வருவதாக விமர்சித்து வந்தனர்.
இந்த சூழலில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, விழுப்புரம் திரௌபதி அம்மன் திருக்கோயிலை வைத்து சிலர் அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால், அரசு அதற்கு இடம் கொடுக்காது. இன்னும் ஒரு வார காலத்தில் அந்த திருக்கோயில் பக்தர்களுக்காக திறக்கப்படும். அதற்கான அனைத்து பூஜைகளும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இது ஒரு புனிதமான இடம், இதை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவது தவறு. திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரானது என்று சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் கோயில்களை புனரமைத்து, பக்தர்களுக்கு சிறந்த சூழலை உருவாக்கி வருகிறோம். விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயில் திறப்பும் அதன் ஒரு பகுதிதான்.
கோயில் திறப்பிற்கு முன்னதாக, புனித நீர் தெளித்தல், ஹோமங்கள், மற்றும் கும்பாபிஷேகம் போன்ற பூஜைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, அறநிலையத்துறை அதிகாரிகள், புரோகிதர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து பணிகளை செய்து கொண்டு இருக்கிறார். “கோயிலை திறப்பதற்கு முன், அனைத்து மரபுகளும் பின்பற்றப்படும். பக்தர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல், பாதுகாப்பான முறையில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.