சேலம்: ஜோலார்பேட்டை அருகே ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த கிராம மக்கள், ஓட்டுப்பெட்டிக்குள் வாக்குச்சீட்டுக்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை போட்டுள்ளனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பது மட்டுமின்றி, அக்கிராம மக்களின் அறியாமை விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

தமிழகத்தில் நடைபெற்று 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக அமோக வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக புறந்தள்ளப்பட்டுள்ள நிலையில், பாஜக முற்றிலும் தமிழக மக்களால் தூக்கி வீசப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  தேர்தலில் வாக்களித்த மக்கள்,   வாக்குச்சீட்டுகளை ஓட்டுப்பெட்டிக்குள் போடுவதற்கு பதிலாக வாக்காளர் அடையாள அட்டையை போட்டுவிட்டு சென்றுள்ளனர்.

கடந்த சில தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு நடைபெற்று வந்த நிலையில், ஊராட்சி தேர்லில் வாக்குச்சீட்டு பதிவு முறை அறிவித்தது, கிராம மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த அதிர்ச்சி சம்பவம்,  திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சந்திரபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது. அங்கு வாக்கு எண்ணிக்கையின்போது, வாக்குப் பெட்டிகளை பிரித்து பார்த்த அலுவலகர்கள், வாக்குச்சீட்டுக்கு பதிலாக பலரது  வாக்காளர் அடையாள அட்டையை வாக்குப்பெட்டிகள் போட்டிருந்தது தெரியவந்திருக்கிறது.

இது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நமது நாடு சுதந்திரம் அடைந்து 75ஆண்டுகளை நெருங்கி உள்ளது. கிராமம்தோறும் பள்ளிகளை தொடங்கி மத்திய, மாநில அரசுகள் கல்வி போதித்து வருகிறது. முதியோர்களுக்கும் எழுத்தறிவித்து வருகிறது. நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்து, இன்று நவீன டிஜிட்டல் யுகத்திற்குள் வேகமாக போய்க்கொண்டிருக்கும் வேளையில், கிராமத்தின் வோட்டு போடக்கூட தெரியாத அவலம் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழுக்காகவே கருதப்படுகிறது. வாக்குச்சீட்டு முறையிலான தேர்தல் குறித்து, கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தாத மாநில தேர்தல் ஆணையத்தின் அக்கறையின்மையே இதற்கு காரணம் என சமூக வலைதளங்களில்பதிவிடப்பட்டு வருகிறது.

அதே வேளையில் நவீன காலத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள மறுக்கும் இதுபோன்ற சிலரை என்ன செய்வது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது.