ஈரோடு: சத்தியமங்கலம் அருகே சாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று 2வது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுடன் கிராம மக்களும் இணைந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள சத்தியமூர்த்தி நகர் எனும் பகுதியில் வசிக்கும் காட்டுநாயக்கன் சமுதாய மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்து காட்டுநாயக்கன் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பள்ளி வகுப்புகளை புறக்கணித்து குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று சத்திய மங்கலம் அருகே சாதி சான்றிதழ் கேட்டு மாணவர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு 21 கிராம மக்கள் திரண்டு உள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு வந்து பாதுகாப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில், தகவல் அறிந்த தாசில்தார் விரைந்து வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்த 15,000 மலையாளி இன மக்கள் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வரும் நிலையில், அவர்களுக்கு முறையான சாதி சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், அவர்களின் குழந்தைகள் கல்வி, வேலை வாய்ப்பு, அரசு சலுகை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கும் ஜாதி சான்றிதழ் வழங்க வலியுறுத்தி பல வருடங்களாக பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடம்பூர் மலை குத்தியாலத்தூர் ஊராட்சி கரளியம், கல் கடம்பூர், பெரியசாலட்டி, சின்னசாலட்டி, இருட்டிபாளையம், கிட்டாம்பாளையம், அத்தியூர் உள்பட 21 கிராமங்களில் பந்தல் அமைத்து கோரிக்கைகள் அடங்கிய பதவிகளை பிடித்து பள்ளி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுடன் 21 கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் சக்திவேல் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதைத்தொடர்ந்து இன்று 2-வது நாளாக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுடன் கிராம மக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் வசிக்கும் மலையாளி இனமக்களுக்கு எஸ்.டி பட்டியலில் சாதி சான்று பெற்றுள்ளனர். ஆனால் ஈரோடு மாவ ட்டத்தில் கடம்பூர், பர்கூர் மலைகளில் வசிக்கும் மலையாளி மக்களுக்கு அவ்வாறு சான்று வழங்க மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், தங்களுக்கும் அதுபோல எஸ்டி சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.