தஞ்சாவூர்: ஏழை இஸ்லாமியர் வீட்டுக்கு புத்தாடை, சீர்வரிசையாக எடுத்து வந்து, பிரியாணி பரிமாறிய கிராம மக்கள், அவர்களுடன் இணைந்து ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினார். இந்த நெகிழ்ச்சி மற்றும் சகோதரத்துவ சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை சேகர் காலனியில் குடும்பத் தலைவர் அலாவுதீன் மறைவால், ரம்ஜான் கொண்டாட முடியாத ஏழை இஸ்லாமியர் வீட்டுக்கு புத்தாடை உள்ளிட்ட பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து, பிரியாணி பரிமாறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் அப்பகுதி மக்கள். அவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவருந்தி ரம்ஜான் பண்டிகை வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டனர்.
தமிழ்நாட்டு மக்களிடையே சாதி, மத பேதமின்றி சகோதரத்தும் திளைத்து உள்ளது. ஆனால், சில அரசியல் கட்சிகள், மதவாத அமைப்புகள், சாதிய அமைப்புகள் மற்றும் அரசின் சில ஒருதலைப்பட்சமான நடவடிக்கை போன்ற காரணங்களால்தான், மக்களிடையே ஒற்றுமை சீர் குலைந்து, வேற்றுமை வளர்க்கிறது. இதை தடுக்க வேண்டிய சமூக ஆர்வலர்களும் அரசியல் பின்னணியில் ஒளிந்து கொள்கின்றனர்.
இதுபோல சூழலில்தான், தமிழக மக்களே தங்களுக்குள் மதமாச்சரியமின்றி தங்களது சகோதரத்துவத்தை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்துக்களின் பண்டிகை, மற்றும் தேர் திருவிழாவின்போது, இஸ்லாமியர்கள் சீர் வரிசை கொண்டு வந்து, விழாவில் கலந்துகொள்ளவது போல, இந்துக்களும் பல்வேறு வகையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான், தஞ்சாவூர் பகுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட முடியாத ஏழை இஸ்லாமிய குடும்பத்துக்கு அந்த பகுதி கிராம மக்கள் ஒன்றிணைந்து, புத்தாடை உடன் சீர்வரிசை கொடுத்து, அவர்களுக்கு பிரியாணிபறிமாறி, அவர்களுடன் கிராம மக்களும் இணைந்த உணவருந்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கிராம மக்களின் இந்த நடவடிக்கை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.