நாகப்பட்டினம்

கிராம நிர்வாக பெண் அலுவலர் ரூ. 10000 லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

கணேசன் என்னும் நாகப்பட்டினம் பெருமாள் சன்னதியை சேர்ந்த நபர் கீழ்வேளூர் அருகே அகரகடம்பனூரில் உள்ள அவருக்கு சொந்தமான இடத்தை அவரது மனைவியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலர் செல்வியை அணுகினார்.

பட்டா மாறுதல் செய்ய தனக்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் செல்வி, கணேசனிடம் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கணேசன் இது குறித்து நாகப்பட்டினம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தாா்.

லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை (ரூ.10 ஆயிரம்) கணேசனிடம் கொடுத்து, கிராம நிர்வாக அலுவலர் செல்வியிடம் கொடுக்குமாறு கூறினா்.

அதன்படி நேற்று மதியம் சுமார் 1.30 மணி அளவில் அகரகடம்பனூர் கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்ற கணேசன் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் செல்வியிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கையும், களவுமாக பணத்துடன் செல்வியை கைது செய்துள்ளனர்.