சென்னை: விளவங்கோது தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி கட்சி மேலிடத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
தமிழக காங்கிரஸ் கட்சியில் தனக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும், பெண் என கூறி தன்னை ஓரங்கட்டுவதாகவும், விளவங்கோடு தொகுதி எம்எல்ஏவான விஜயதாரணி புலம்பி வருகிறார். இதுதொடர்பாக கட்சி மேலிடத்தில் புகார் கூறியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் கடந்த சில மாதங்களாக வருத்தத்தில் இருந்து வந்ததுடன், பல நிகழ்ச்சிகளையும் புறக்கணித்தார்.
இந்த நிலையில், இந்த மாதம் தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னினையில் பா.ஜ.க-வில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையில், மாநில பாஜக தலைவர், அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரதமர் மோடி தமிழ்நாடு வர இருக்கிறார். வரும் 25 -ம் தேதி பல்லடத்தில் பிரம்மாண்டமாக அண்ணாமலையின் யாத்திரை நடக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, இன்று இரவு நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 லட்சம் பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடி முன்னிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதாரணி, பா.ஜ.க-வில் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. இது காங்கிரசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவில் இணையும் விஜயதாரணிக்கு, மக்களவை தேர்தலில், பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாகவும் தாமரை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுதொடர்பாக விஜயதாரணி எந்தவொரு விளக்கம் அளிக்கவில்லை.