சென்னை: தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஆர்பி உதயகுமாருக்கு வழங்கப்பட்டது.

இந்த இருக்கை விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முதலமைச்சர் ஸ்டாலின், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும்படி சபாநாயகருக்கு அறிவுறுத்திய நிலையில், இன்று எடப்பாடி பழனிச்சாமியின் கோரிக்கை ஏற்பட்டு, இருக்கை ஒதுக்கப்பட்டு உள்ளது. 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி குழப்பம் காரணமாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஓ பன்னீர் செல்வத்தை துணைத்தலைவராக அங்கீகரிக்க கூடாது என்றும் புதிய துணைத்தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமாரை எம்.எல்.ஏக்கள் தேர்வு செய்து இருப்பதாகவும் அதிமுக கூறியது.

இது தொடர்பாக சட்டசபையில் ஓ பன்னீர் செல்வத்தின் இருக்கையை மாற்ற வேண்டும் என்றும் அவை மரபுப்படி எதிர்க்கட்சி தலைவருக்கு அருகில் எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் பல்வேறு முறை அதிமுக மூத்த எம்.எல்.ஏக்கள் கடிதம் கொடுத்தனர். எனினும், அவையில் இருக்கை ஒதுக்கும் விவகாரம் என்பது தனது தனிப்பட்ட உரிமை என்றும் அவை விதிகளின் படியே தான் செயல்படுவதாகவும் சபாநாயகர் அப்பாவு கடந்த இரு ஆண்டுகளாக கூறி வந்தார்.

உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள், இந்திய தேர்தல் ஆணையம் எடப்பாடி அணியை அதிமுக என அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையிலும், சபாநாயகர் அப்பாவு பிடிவாதமாக எடப்பாடி அணியை அங்கீகரிக்க மறுத்து வந்தார்.  இந்த நிலையில், சட்டப்பேரவையில்  ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது (பிப்ரவரி 13, 2024)  எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர்.  எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியும் இதே கோரிக்கையை வைத்து பேசினார்.

அப்போது உடனே முதல்வர் முக ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு பேசினார்.  அப்போது,  எடப்பாடி பழனிசாமி, தங்கள் கட்சிக்கு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர் பி உதயகுமாருக்கு இடம் ஒதுக்கி தருமாறு தொடர்ந்து இந்த அவையிலே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.  இது சபாநாயகருக்கு உள்ள உரிமை என்று இந்த விவகாரத்தில் பலமுறை அப்பாவு விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே இதே அவையில் அவைத்தலைவராக இருந்த தனபால் என்ன தீர்ப்பு தந்தாரோ? அதை அடிக்கடி நீங்கள் சுட்டிக்காட்டி சொல்கிறீர்கள். எனினும், இந்த விஷயத்தில், எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு நான் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் பரிந்துரைப்படி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனப் பதிலளித்தார்

இந்த நிலையில், இன்று,  எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை எடப்பாடி ஆதரவாளரான ஆர்.பி. உதயகுமாருக்கு ஒதுக்கி சபாநாயகர் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, இன்று  எடப்பாடி பழனிசாமி அருகிலேயே எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர் பி உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

உடல்நிலை பாதிப்பு காரணமாக, ஓ.பன்னீர்செல்வம் கடந்த சில நாட்களாக அவைக்கு வராத நிலையில், அவருக்கு  வேறு இடத்தில் ஏதேனும் ஒரு இருக்கை  ஒதுக்கப்படலாம் என்று சட்டமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

பாஜகவுடனான கூட்டணி முறித்த அதிமுக, சிஏஏ உள்பட சில சட்டங்களுக்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாக பேசி வரும் நிலையில், எடப்பாடியின் கோரிக்கை ஒரே நாளில் ஏற்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.