சென்னை:

மிழகத்தில்  விக்கிரவாண்டி, நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் இடைத்தேர்தல் வரும் 21ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் களத்தில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி பேரவை தொகுதிகள் மற்றும் புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு வரும் 21ம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் வேட்பு மனுக்கள் தாக்கல் முடிவடைந்த நிலையில் நேற்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து  இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், திமுக வேட்பாளர் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.

முத்தமிழ்செல்வனுக்கு இரட்டை இலை சின்னமும், புகழேந்திக்கு உதயசூரியன் சின்னமும், கந்தசாமிக்கு கரும்பு விவசாயி சின்னமும், இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் நிறுவனருமான கவுதமனுக்கு சாவி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணன், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த ராஜ நாராயணன் உட்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரன் மற்றும் நாம் தமிழர் வேட்பாளர் பிரவினா மதியழகன் உட்பட 9 பேர் களமிறங்கியுள்ளனர்.