சென்னை: இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள விக்கிரவாண்டி தொகுதியில் தேசிய ஜனநயாக கூட்டணி சார்பில்,  பாமக  வேட்பாளரை அறிவித்து உள்ளது. அதன்படி, வேட்பாளராக சி.அன்புமணி போட்டி என பாமக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக சார்பில் சி.அன்புமணி போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார் .

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் ஜூலை 10&ஆம் நாள் நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளராக வன்னியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி போட்டியிடுவார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமகநிறுவனர் ராமதாஸ் தனது எக்ஸ் தளத்தில்,  விக்கிரவாண்டி தொகுதி பா.மக, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சி.அன்புமணி அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் இன்று காலை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவக்குமார் உடன் உள்ளார் என பதிவிட்டுள்ளார்.

முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில்,  தமிழகத்தில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10 ம் தேதி அன்று நடைபெற உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் ஒருமனதாக எடுத்த முடிவின்படி, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியானது விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் என்று அறிவிக்கப்படுகிறது.