புதுடெல்லி:
ஓராண்டுக்கு பின்னர் அடுத்த மாதம் தொழில் முறை போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் பிவானியைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்(35). இவர் கடந்த 2008ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடரில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம் பதக்கம் வென்றார். இதுவே குத்துச்சண்டை பிரிவில் இந்தியாவிற்கு கிடைத்த முதல் பதக்கம் ஆகும். இதையடுத்து 2009ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை தொடரில் வெண்கலம் வென்று முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர்.
இந்நிலையில், ஓராண்டுக்கு பின்னர் அடுத்த மாதம் தொழில் முறை போட்டிகளில் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி இந்தியாவில் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், போட்டிக்கான தேதி மற்றும் விஜேந்தருடன் மோத உள்ள வீரர் குறித்த விப்ரங்கள் இன்னும் வெளியாக வில்லை
விஜேந்தர் தனது தொழில் வாழ்க்கையில் இதுவரை எட்டு நாக் அவுட் வெற்றிகளுடன் 12-0 என்ற சாதனையைப் படைத்துள்ளார். WBO ஓரியண்டல் சூப்பர் மிடில்வெயிட் மற்றும் WBO ஆசியா பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் சாம்பியனான விஜேந்தர், 2019 நவம்பரில் தனது கடைசி போட்டியில் துபாயில் கானாவின் சார்லஸ் ஆதாமுவை வீழ்த்தினார்.
தான் மீண்டும் களத்தில் இறங்குவது குறித்து பேசிய விஜேந்தர், போட்டிகளுக்கு திரும்புவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்றும், போட்டிக்கு ஏற்ப கடுமையாக பயிற்சி செய்து வருகிறேன் என்றும் தெரிவித்தார்.
தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வரும் விஜேந்தர், விவாசாயிகள் போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு அளித்ததுடன், தன்னுடைய ஆதரவை விவசாயிகளுக்கு அளிக்கும் வகையில், தனக்கு அளிக்கப்பட்ட கேல் ரத்னா விருதை திரும்ப அளிக்க உள்ளதாகவும் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.