சென்னை: செப்டம்பர் 27ந்தேதி விஜயின் கரூர் தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட துயரத்தில் 41 பேர் பலியான நிலையில், அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நிவாரணம் மற்றும் ஆறுதல் தெரிவிக்க நாளை (அக். 17) மீண்டும் கரூர் செல்லவிருந்த விஜயின் இந்த பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது.

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி பிரசாரத்துக்கு சென்ற விஜயை பார்க்க ரசிகர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் முன்டியடித்துச் சென்றனர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியாகினர். 180க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று விஜய் அறிவித்தார். தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் உள்பல தரப்பில் இருந்தும் நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் திமுக அரசின் துரித நடவடிக்கை வரவேற்கப்பட்டாலும், சில நிகழ்வுகள் சர்ச்சையையும், பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மாறுபட்ட கருத்துக்கள், வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இதையடுத்து, இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
இதன்பிறகே விஜய் மீண்டும் கரூர் செல்ல திட்டமிட்டு உள்ளார். கரூர் சம்பவம் நடந்து 20 நாட்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களையும், இறந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறவும், அவர்களுக்கு நிவாரண உதவி வழங்கவும் விஜய் முடிவு செய்தார். இதற்காக அவர் நாளை (17ந்தேதி) கரூர் செல்ல உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடு கள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் பரவின. ஆனால் இந்த கூட்டத்துக்கு இதுவரை போலீசார் அனுமதி வழங்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விரைவில் அவர் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதா? அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து நிவாரண உதவிகள் வழங்குவதா என்று விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.