சென்னை: பிரபல காமெடி நடிகர்களுல் ஒருவரான பவர்ஸ்டார் சீனிவாசன், ‘ தேர்தலில் விஜய் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கூறியதுடன், அவரது ரசிகர்களால் எனக்கு ஆபத்து வந்தால் முதலமைச்சர் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற ‘பர்பியூம்’ திரைப்படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
நான் பல நாட்களாக உடல்நிலை சரி இல்லாமல் இருந்தேன். தற்போது சரியாகி நன்றாக இருக்கிறேன். என்னை பற்றி தவறான தகவல்கள் நிறைய பரவுகிறது. நான் அதை பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டேன். அது என்னை மென்மேலும் கொண்டு சென்றுதான் இருக்கும். கடவுள் நிச்சயம் ஒருநாள் என்னை கூட்டிச் செல்வார். அதுவரையிலும் நான் உங்கள் கண் முன்னாடி தான் இருப்பேன் என்றார்.
பின்னர் விஜய் அரசியல் தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், நான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். அவரை இப்படி தவறாக பேசும்போது நான் வேதனைப்பட்டேன் .தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மக்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்பதைதான் கூற வேண்டும். அதை விட்டுவிட்டு, தனக்கு கூட்டம் இருக்கிறது என்பதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என மேடையில் பேசக்கூடாது.
ஜோசப் விஜய் அவர்களே, உங்களை நான் மிகவும் மதிக்கிறேன். என்னுடைய உடன் பிறந்த தம்பி மாதிரி தான் உங்களை நான் பார்க்கிறேன். அவர் மிகவும் அமைதியாக இருப்பார். ஆனால் இப்போது பார்த்தால் மேடையில் பயங்கரமாக டயலாக் எல்லாம் பேசுகிறார். மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் மற்றும் கொள்கைகள் பற்றி பேசாமல் விஜய் எடுத்தவுடனே எதிரிகளைப் பற்றி பேசுகிறார். அதெல்லாம் மிகவும் தவறு. அவர்களுக்கு எல்லாம் 50 வருட அனுபவம் இருக்கிறது.
முதலில் விஜயை களத்திற்கு வரச் சொல்லுங்கள். அவர் மேடையில் பேசுவதெல்லாம் பஞ்ச் டயலாக்ஸ் வசனங்கள், அதையெல்லாம் மக்கள் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், தேர்தல் களம் அப்படி அல்ல. எனக்கும் ரசிகர்கள் உள்ளனர். எனக்கும் அவரை போலவே கூட்டம் கூடும். நானும் ஒரு கட்சி ஆரம்பிக்கலாம் என்று தான் இருந்தேன். ஆனால் ஒரு சில சூழ்நிலைகள் காரணமாக அது, நடைபெறாமல் போய்விட்டது.
வரும் 2026 இல் என் அருமை தம்பி விஜய் எங்கு நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். என்னை போட்டியிட எந்த கட்சி அழைத்தாலும், அதில் இணைந்து, ஜோசப் விஜயை எதிர்த்து நிற்பேன். கூட்டத்தை பார்த்து எடை போடக்கூடாது. ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு.
இப்போ நான் பேசியதால் விஜயின் ரசிகர்களால் எனக்கு ஆபத்தும், அச்சுறுத்தலும் இருக்கலாம். அதனால் முதல்வர் தான் என்னை பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால் மக்களை சந்தித்து பிரச்சாரத்திற்கு செல்லும்போது பிரச்சாரம் செய்யுங்கள். வசனங்களை பேசாதீர்கள்.
இவ்வாறு கூறினார்.