கோவை:

ஜெயலலிதாவை சட்டமன்றத்தில் வைத்து, விஜயகாந்த் முறைத்ததே தேமுதிகவின் வீழ்ச்சிக்கு காரணம் என்று அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி பேசிய நிலை யில், இன்னும் முடிவு எட்டப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா,  அ.தி.மு.க.வை சேர்ந்த 37 எம்.பி.க்கள் இருந்தும் நல்ல திட்டங்கள் கிடைக்காமல் போய் விட்டது, அவர்கள் வேஸ்ட் என்றும் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கோவை சூலூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கனகராஜ், பிரேமலதாவை கடுமையாக சாடிய நிலையில், 37 எம்.பி.க்களால் பலனில்லை என்று பிரேமலதா சொல்வது அந்தம்மாவோட சொந்த கருத்து என்றார்.

கூட்டணி தொடர்பாக  தே.மு.தி.க. இரு கட்சிகளுடனும் பேசுவது மிகப்பெரிய தவறு என்று குற்றம் சாட்டியவர், அரசியல் நாகரீகம் தெரியாமல் சட்டசபையில் ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் நாக்கை துருத்தியதே விஜயகாந்தின்  வீழ்ச்சிக்கு காரணம் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், ஓட்டுக்காக, ம.தி.மு.க.வுடன் தி.மு.க. கூட்டணி வைத்திருக்கும் போது நாங்கள் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைத்தால் என்ன தப்பு? என்றும் கேள்வி எழுப்பினார்.