சென்னை: நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தேமுதிக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
உடல்நலம் பாதிப்பு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக உடல்நல குறைவால் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சுமார் 3 வார சிகிச்சைக்கு பறிகு, உடல்நலம் தேறி டிசம்பர் 12ம் தேதி வீடு திரும்பினார். அதனை தொடர்ந்து அவரது தலைமையில் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் விஜயகாந்தும் பங்கேற்றார். அவரது நிலைமை குறித்து பலரும் பரிதாப பட்டதுடன், விமர்சனங்களும் எழுந்தது. இந்த கூட்டத்தில், தேமுதிகவின் பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த சூழலில், தற்போது மீண்டும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் போரூர் அருகே உள்ள மியாட் மருத்துவமனையில் 26ந்தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தேமுதிக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்துதேமுதிக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். பூரண நலத்துடன் இருக்கிறார். பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் (28.12.23) வீடு திரும்புகிறார்” என குறிப்பிடப்பட்டிருந்தது.