லண்டன்,

பிரபல இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வங்கிகளில் 9000 கோடி ரூபாய் கடன் வாங்கி மோசடி செய்த வழக்கு காரணமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

லண்டனில் சொகுசாக வாழ்ந்து வந்த மல்லையா, பல்வேறு வழக்கு காரணமாக அவரை நாடு கடத்துமாறு இங்கிலாந்துக்கு  இந்திய அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

இதுகுறித்து எதிர்க்கட்சிகளும்  பாராளுமன்றத்தில் மல்லையாவை கைது செய்து இந்தியா கொண்டு வந்து விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தின.

அப்போது பேசிய அருண்ஜேட்லி,  தொழில் அதிபர் விஜய் மல்லையா உள்ளிட்டோரின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும்,  இந்திய வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி மோசடி செய்து பிரிட்டனுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்த வழக்கில் பலமுறை விஜய்மல்லையாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் இந்தியா வர மறுத்துவிட்டார். தேவைப்பட்டால் இந்திய அதிகாரிகள் லண்டனுக்கு வந்து என்னிடம் விசாரணை நடத்தட்டும் என்றார்.

தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றார். இந்தக் கடன்களை அவர் திருப்பிச் செலுத்தவில்லை. இது குறித்து வங்கிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய்மல்லையா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதால்,  அவரை இங்கிலாந்து அரசு,  விசாரணைக்காக இந்தியா அனுப்புமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.