லண்டன்:

ற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் இருந்து தமிழக வீரர் விஜய்சங்கர் விலகி உள்ளார். அவருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நீக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழக வீரர் விஜய்சங்கர்

ஏற்கனவே உலக கோப்பை போட்டித் தொடரில் இருந்து இந்திய அணியின்  தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் கைவிரல் காரணமாக வெளியேறி உள்ள நிலையில், தற்போது விஜய்சங்கர் கால் விரல் காயம் காரணமாக வெளியேறி உள்ளது  இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

12வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதுவரை இந்திய அணி  ஆடிய ஆட்டங்களில் வெற்றி பெற்று வந்த நிலையில், நேற்றைய இங்கிலாந்து அணி உடனான போட்டியில் முதன்முறையாக தோல்வியை சந்தித்தது.

தற்போதைய உல கோப்பை அணியில் தமிழகத்தை சேர்ந்த வீரர்கள்  தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் இடம்பெற்றிருந்த நிலையில், இதுவரை ஆடிய ஆட்டங்களில் விஜய்சங்கருக்கு மட்டுமே களமிறங்க வாய்ப்பு கிட்டியது. இந்த தொடரின் 3 போட்டிகளில் ஆடிய விஜய்சங்கர்,  58 ரன்களை எடுத்ததுடன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.

இன்னும் ஜூலை 2ந்தேதி வங்காள தேசம் அணியையும், ஜூலை 6ந்தேதி இலங்கை அணியையும் சந்திக்க வேண்டிய சூழ்நிலையில், வலைப்பயிற்சியின்போது  எதிர்பாராதவிதமாக இடதுகாலில் ஏற்பட்ட காயம் காரணமாக நேற்றைய இங்கிலாந்து எதிரான ஆட்டத்தில் அவர் ஆட முடியாத நிலையில், மற்ற போட்டிகளில் இருந்தும் அவர் விலகியிருப்பதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது.

இதன் காரணமாக விஜய்சங்கருக்கு பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டு உள்ளார்.

கர்நாடகத்தை சேர்ந்த வீரரான மயங்க் அகர்வால் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். இதுவரை 75 இன்னிங்சில் ஆடிய மயங்க் சராசரியாக 48.71 ரன்கள் எடுத்துள்ளார்.  இதுவரை 12 சதங்கள் மற்றும் 14 அரைசதங்கள் என மொத்தம் 3605 ரன்கள் குவித்துள்ளார்.

இவர்  கடந்த ஆண்டு இந்தியா ஏ அணியில் ஆடி,  இங்கிலாந்தில் அதிக ரன்களை குவித்தார். அங்கு நடைபெற்ற   நான்கு ஒருநாள் இன்னிங்சில் சராசரியாக 71.75 சராசரியாகவும், ஸ்ட்ரைக் வீதம் 105.90 ஆகவும் மொத்தம் 287 ரன்களும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.