சென்னை: விஜய்சேதுபதியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த டிவிட்டர் பயனர் அடையாளம்  கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவும், ஆனால் அவர்மீது நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வும் காவல்துறை தெரிவித்து உள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பயோபிக் படத்தில், நடிகர் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தமான விவகாரம் சர்ச்சையான நிலையில், அவரது மகள்  பாலியல் வன்புணர்வு செய்யப்பட வேண்டும் என சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டது. அவர் இலங்கை தமிழர்களின் மனதை புரிந்துகொள்ளாமல் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதை கண்டித்து, விஜய்சேதிபதியின் மகளை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவதாக டுவிட்டரில் மிரட்டல் விடுத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இதற்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவரின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.  மேலும்,  சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 153, 294(பி),Ipc 67 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு டிவிட்டரில் பாலியல் அச்சுறுத்தல் கொடுத்த நபரின் அடையாளம் தெரிந்ததாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.  அந்த இலங்கை தமிழர் என்றும் தற்போது அவர் இலங்கையில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளது. ஆனால், அவரை தமிழக காவல்துறையால் கைது செய்ய முடியாது என்பதால், அந்த இளைஞரை கைது செய்ய இண்டர்போலின் உதவியை நாட தமிழக காவல்துறை முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.