சென்னை: வெங்காயம் விலை உயர்வுகாரணமாக எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது. இந்த வெங்காயம்  கோயம்பேடு காய்கறி சந்தையில் கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்மழை காரணமாக தமிழகத்திற்கு வெளிமாநிலங்களிருந்து வரும் வெங்காயத்தின்  வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர், கர்நாடக மாநிலம் கதக், ஹூப்ளி, தெலுங்கானா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்து தான் தமிழகத்திற்கு வெங்காயம் வந்துகொண்டிருந்தது.  ஆனால் வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் கனமழை பெய்து வருகிறது. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.கிலோ ரூ.100ஐ தாண்டியதால், பொதுமக்கள் வேதனை அடைந்தனர்.

இதையடுத்து, தமிழகஅரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.  மக்கள் நலனை கருதி பண்ணை பசுமை கடைகளில் வெங்காயம் ரூ. 45க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வியாபாரிகள் எகிப்தில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்துள்ளது.  தற்போது எகிப்து வெங்காயம்  கிலோ ரூ.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.