ராஜீவ் கொலை வழக்கில் சிறைபட்டிருக்கும் ஏழுபேரை விடுதலை செய்யக்கோரி, இருசக்கர பேரணி நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் பேரறிவாளன் குறித்து நடிகர் சேதுபதி கருத்து தெரிவித்தார். அவர், “கடந்த பல ஆண்டுகளாக தனிமைச்சிறையில் பேரறிவாளன் இருக்கிறார். அவர் விடுதலை செய்யப்படவேண்டும். அவர் உட்பட ஏழுபேர் விடுதலைக்காக  நடத்தப்படும் இரு சக்கர பேரணியில் நாம் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்” என்று பேசினார்.
இதையடுத்து “நாம் தமிழர் கட்சி” ஆதரவாளர்கள் என்று வெளிப்படுத்திக்கொள்ளும் சிலர், “விஜய்சேதுபதி தெலுங்கு வம்சாவளியைச் சேர்ந்தவர். அவர் எப்படி பேரறிவாளன் பற்றி பேசலாம்” என்னும் பொருள்பட முகநூல் உட்பட சமூக வலைதளங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தினர்
இதை சமூகவலைதளங்களில் பெரும் விவாதப்பொருள் ஆகியது. இந்த நிலையில் , நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “விஜய் சேதுபதி என் சகோதரர். அவரது உணர்வை மதிக்கிறேன். அவருக்கு நன்றியுயும் பாராட்டும் தெரிவிக்கிறேன்” என்று தனது முகநூல் பக்கத்தில் எழுதினார்.

விஜய் சேதுபதி - சீமான்
விஜய் சேதுபதி – சீமான்

இந்த நிலையில் நாம் சீமானை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “விஜய்சேதுபதி நமது தம்பிதான். எனக்கு இருக்கும் உணர்வு அவருக்கும் இருக்கிறது. அவரை பாராட்டுகிறேன்.
ஆனால் நம்ம கட்சியை (நாம் தமிழர்) சேர்ந்தவர் என்று வெளிக்காட்டிக்கொண்டு யாராவது ஒருவர் எதையாவது ஒரு கருத்தை எழுதிவிடுகிறார்கள்.  யார் அந்த நபர் என்று பார்த்தால், நமது கட்சி ஆளாகவே இருக்கமாட்டார்கள்.  ஆகவேதான், விஜய் சேதுபதி பற்றி வந்த எதிர்மறையான கருத்தில் “நாம் தமிழர்” கட்சிக்கு உடன்பாடு இல்லை என்பதை உணர்த்த எனது முகநூல் பக்கத்தில் எழுதினேன்.
இன்றைய சூழலில் பொது வெளியில் எத்தனை நடிகர்கள் இப்படி தமிழுணர்வை வெளிப்படையாக  சொல்கிறார்கள்? ஆகவே தம்பி விஜய் சேதுபதியின் உணர்வை மீண்டும் பாராட்டுகிறேன்” என்று நம்மிடம் தெரிவித்தார் சீமான்.