லண்டன்:
பிரபல தொழிலதிபர் விஜய்மல்லையா லண்டனில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் இந்திய கொண்டு வரப்படுவாரா என்பது விரைவில் தெரியும்.
தொழிலதிபர் விஜய் மல்லையா தனது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் பெற்றார். இந்தக் கடன்களை அவர் திருப்பிச் செலுத்தவில்லை. இது குறித்து வங்கிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அமலாக்க துறை மற்றும் சி.பி.ஐ.,வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அதைத்தொடர்ந்து வெளிநாட்டுக்கு சென்ற மல்லையா லண்டனில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார். இவரை ஏற்கனவே லண்டன் போலீசார் கைது செய்திருந்தனர். தற்போது அவர் ஜாமினில் உள்ளார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அமலாக்கதுறையில் வேண்டுகோளுக்கு இணங்க பண மோசடி தொடர்பாக லண்டன் போலீசார் நேற்று கைது செய்தனர். உடனே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு உடனே ஜாமினும் வழங்கப்பட்டது.
அவரை விசாரணைக்கு இந்தியா கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
விஜய்மல்லையா இங்கிலாந்து குடியுரிமை பெற்றுள்ளதால், அவரை இங்கிலாந்து அரசு, விசாரணைக்காக இந்தியா அனுப்புமா என்றும் கேள்வி எழுந்துள்ளது.