சென்னை: திமுகவின் வரலாறு தெரியாமல் விளையாட்டுத்தனமாக பேசுகிறார் விஜய்.  திமுகவின் எதிரி யார் என்பதிலேயே போட்டி  என தவெக பொதுக்குழுவில் திமுகவை விமர்சித்த நடிகர்  விஜய் பேச்சுக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுத்துள்ளார்.

“திமுகவின் எதிரி யார் என்றுதான், மற்றக் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, திராவிட முன்னேற்றக் கழகம் நிலையாக செயல்பட்டு வருகிறது” என கூறினார்.

சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற தவெக பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய்,  தமிழ்நாட்டில் அனைத்து குடும்பங்களும் சிறப்பாக வாழ வேண்டும் என்பதே தவெகவின் அரசியல். தவெக நிகழ்ச்சியை நடத்திவிடக் கூடாது என்று ஏராளமான தடைகள் உருவாக்கப்படுகின்றன என்று கூறியதுடன், மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. பெயரில் மட்டும் வீராப்பாக சொன்னால் போதாது.. பாஜக ஆட்சியை பாசிசம் என்று சொல்லும் திமுக, தமிழ்நாட்டிலும் பாசிச ஆட்சியை நடத்துகிறது  என்று கடுமையாக விமர்சனம் செய்ததுடன்,

அரசியல்னா என்னங்க? ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழனும்னு நினைக்கிறது அரசியலா? இல்ல ஒரே குடும்பம் மட்டும் நல்லா வாழனும்னு நினைக்கிறது அரசியலா? தமிழ்நாட்டை சுரண்டி நல்லா வாழனும்னு நினைக்கிறதை விட எல்லாருக்கும் நல்லது நடக்கணும்னு நினைக்கிறது தானே அரசியல். அது தான் நம்ம அரசியல். காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல்னு தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடை மாற்றி, மக்கள் விரோத ஆட்சியை, மன்னர் ஆட்சி போன்று நடத்துகிறார்கள். நமக்கு எதிராக இவர்கள் செய்வது ஒன்றா இரண்டா? மாநாட்டில் ஆரம்பித்து, புத்தக வெளியீட்டு விழா, பரந்தூர் போன போது, கட்சி இரண்டாம் ஆண்டு தொடக்க விழா என எப்படி எல்லாம் தடைகள் வந்தன.

ஆனால் அத்தனை தடைகளையும் தாண்டி நம்முடைய தோழர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகள், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும்.

2026 சட்டமன்றத் தேர்தலில் வித்தியாசமான தேர்தலை தமிழ்நாடு பார்க்க போகிறது.. இந்த தேர்தலில் 2 கட்சிகளுக்கு இடையில் மட்டுமே போட்டி.. ஒன்று தவெக.. மற்றொன்று திமுக என பேசியிருந்தார்.

நடிகர் விஜயின் பேச்சு, தமிழ்நாடு அரசியல் களத்தில் விவாதப்பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில்,  சென்னை பெரம்பூர் ஜமாலியாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“திமுகவின் திறந்த நிலை வெளிப்பாடு என்ன என்பது எல்லாருக்கும் தெரியும். ஒளிவு, மறைவு இல்லாமல் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பது திமுக தான். முன்பக்கம் எதிர்ப்பது, பின்பக்கம் வரவேற்பது அல்லது முன் பக்கம் வரவேற்பது பின்பக்கம் எதிர்ப்பது என்ற இரட்டை நிலை, பண்பாடு எல்லாம் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு கிடையாது.

திமுகவின் வரலாறு தெரியாமல் தவெக தலைவர், நடிகர் விஜய் கருத்தை சொல்வதாக தான் பார்க்கிறோமே தவிர, பொறுப்புள்ள ஒரு பொருட்டான கருத்தல்ல. விளையாட்டுத்தனமான, திமுக வரலாறு புரியாத ஒரு தலைவரின் கருத்து. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்களால் வாக்களிக்கப்பட்டு, ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்டு, அதன் மூலம் திமுக ஆட்சி அமைந்து அமைச்சர்கள் பங்கேற்ற செயல்பட்டு வருகிறார்கள். இது ஒன்றும் மடமல்ல. ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவோடு நின்று வெற்றி பெற்று மக்கள் பணியாற்றுவது எப்படி குடும்ப ஆட்சி, மன்னராட்சி என்று சொல்ல முடியும். இது இயலாதவர்கள் புலம்பலேத் தவிர, திமுக கொள்கை கூடாரமாக பொலிவோடு செயல்பட்டு வருகிறது.

திமுகவின் எதிரி யார் என்றுதான் எதிரிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்களே தவிர, திராவிட முன்னேற்றக் கழகம் நிலையாக செயல்பட்டு வருகிறது.  எதிர்ப்பது யார் என்பதுதான் அவர்களுக்குள் போட்டி” என தெரிவித்தார்.