திருச்சி: நடிகர் விஜய் எங்களுக்கு அண்ணன் என்றும், நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு குறித்த முதலமைச்சரே முடிவு எடுப்பார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், திருச்சியில் விளையாட்டு குறித்து பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற உள்ளதாகவும் கூறினார்.
nbu
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி தேசியக் கல்லூரியில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து விளையாட்டு வீர்ரகள் பங்கேற்கும் பன்னாட்டு கருத்தரங்கம் வரும் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த “பன்னாட்டு கருத்தரங்கில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து சிறந்த விளையாட்டு வல்லுனர்கள் மற்றும் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருந்து உடற்கல்வியியல் அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் பங்கேற்று கருத்துகளை வழங்க உள்ளனர். தமிழ்நாட்டில் நடத்தப்பட்டுள்ள கேலோ இந்தியா, செஸ் ஒலிம்பியாட் போன்று , இந்த கருத்தரங்கம் ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று சிறப்பிக்கும் ஒன்றாக இருக்கும். இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்” என்றார்.
இந்த கருத்தரங்களில், என்னுடைய முனைவர் பட்டம் தொடர்பான ஆய்வுக் கட்டுரையும் சமர்ப்பிக்க உள்ளேன் என்றவர், இந்த கருத்தரங்கில், தமிழகத்தில் சிறந்து விளங்கக்கூடிய விளையாட்டு வீரர்களையும் சிறப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பின்னர், செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர், “நடிகர் விஜய்யை பொறுத்தவரைக்கும், எனக்கும், உதயநிதி ஸ்டாலின் மூலம் எங்களுக்கும் கிடைத்த அருமையான அண்ணன். நேரடியாக பேசும் போதும் அன்பொழுக பேசக்கூடியவர் தான். உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தது போல நானும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
திராவிடம் என்ற வார்த்தை நடிகர் விஜயின் கட்சியின் பெயரில் இல்லாதது மற்றும் ஊழல் தொடர்பான கேள்விக்கு, “கட்சி துவங்குவது என்பது அவரவர்களுடைய விருப்பம். கட்சியின் பெயர் வைப்பது என்பது அவர் அவர்களுடைய எண்ணம். அவர்களுடைய கொள்கை என்னவென்று தெரிய வரும் போது, அவர்களது நோக்கம் என்னவென்று தெரியவரும்” என கூறினார்.
தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பான கேள்விக்கு பதில் கூறியவர், “தொகுதி பங்கீடு குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார். இவருக்கு சீட்டு கொடு, அவருக்கு சீட்டு கொடு, இந்த கூட்டணிக்கு சீட்டு கொடு என்று யாரும் சொல்லக்கூடாது. ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி வேட்பாளரை, அனைவருக்கும் பிடித்த வேட்பாளரை நிறுத்துவோம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். நிற்பது முத்தமிழ் அறிஞர் கலைஞர் என எண்ணி செயலாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படியே செயலாற்றுவோம் என்றார்.