சென்னை: “பொது வாழ்வில் ஆத்திச்சூடி கூட அறியாதவர் விஜய். கரூர் துயரத்திற்கு முழுக் காரணமான அவர் பொறுப்பற்று திசை திருப்புகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
தவெக சிறப்பு பொதுக்குழுவில் பேசிய விஜய், திமுக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்ததுடன், அடுத்து நடைபெறும் சட்டமன்ற தேர்தலில், தவெக வுக்கும் திமுகவுக்கும் இடையேதான் போட்டி என கூறியிருந்தார்.

விஜயின் இந்த பேச்சு, தமிழ்நாடு அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய்க்கு திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் கடுமையாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில்., மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விஜய்க்கு எதிராக கொந்தளித்துள்ளார். கரூரில் நடந்த சம்பவத்துக்கு துளியளவும் வருத்தப்படாமல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக, மிக தவறான போக்கு ஆகும்.
ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும், கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார். அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்” என சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி அன்று குழந்தைகள், தாய்மார்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக பலியாகி உயிரிழந்ததற்கு முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டிய த.வெ.க. தலைவர் விஜய் தரம் தாழ்ந்த முறையில், கண்ணியமற்ற வகையில் திசை திருப்புவதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது வெறுப்பையும், கசப்பையும் பொதுக்குழு என்ற பெயரில் நடந்த கூட்டத்தில் கொட்டித் தீர்த்திருக்கிறார்.
நடந்த சம்பவத்துக்கு துளியளவும் வருத்தப்படாமல் குற்ற உணர்ச்சியே இல்லாமல் அவர் பொறுப்பற்று நடந்துகொண்டது மிக, மிக தவறான போக்கு ஆகும்.பொதுவாழ்வில் ஆத்தி சூடியைக்கூட அறியாத இந்த மனிதர் தான் ஆட்சிக்கு வந்துவிட்டதைப் போலவே கனவுலகத்திலும் கற்பனை வாழ்விலும் திளைக்கிறார். காகிதக் கப்பலில் கடல் தாண்ட முனைகிறார். ஆகாய வெளியில் கோட்டை கட்டுகிறார்.
அவரது நம்பிக்கைக் கனவுகள் கானல் நீராகிப் போய்விடும்.75 ஆண்டுகளை, ஆம் முக்கால் நூற்றாண்டை கண்ணீரிலும், வியர்வையிலும், கொட்டிய குருதியிலும், சிறைச்சாலை களிலும் கடந்து வந்த தியாகிகள் கோட்டையாம் தி.மு.க.வை சற்றும் மான வெட்கம் இன்றி எள்ளி நகையாட முனைகின்ற அவரது நிலைமை அனுதாபத்திற்கும், பரிதாபத்திற்கும், கண்டனத்திற்கும் உரியதாகும். இனிமேலாவது அவர் நிதானம் இழக்காமல் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.