சேலம்: சேலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விடிய விடிய மேற்கொண்ட அதிரடி சோதனையில், கணக்கில் வராத 62 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியத்திற்குட்பட்ட பெத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவரின் தாத்தா பெயரில் உள்ள நிலத்தின் பட்டாவை தந்தையின் பெயருக்கு மாற்றம் செய்வது குறித்து ஏர்வாடி, வாணியம்பாடி கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் உதவியாளர் உதயகுமாரை அணுகி யுள்ளார். அப்போது லஞ்சம் கொடுத்தால்தான் வேலை முடியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனால் செல்வகுமார் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை பிரிவு அலுவலகத்தில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கூறியபடி, பவுடர் தடவிய பணத்தை செல்வகுமார் , கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி மற்றும் உதவியாளர் உதயகுமார் ஆகியோரை சந்தித்து கொடுத்தார்.
இதை மறைந்திருந்த கவனித்து வந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், கிராம நிர்வாக அதிகாரி விஜயலட்சுமி மற்றும் அவரது உதவியாளர் உதயகுமார் ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, சேலம் மாநகர், ஜாஹிர் அம்மாப்பாளையம், சூரமங்கலம் பகுதியில் உள்ளபத்திரப்பதிவு சார்பதிவாளர் அலுவலகத்தில், சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில், காவல் ஆய்வாளர் முருகன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக சேலம் மேற்கு பத்திரப் பதிவு அலுவலகத்திற்குள் நுழைந்து, அலுவலகத்திற்குள் இருந்து யாரும் வெளியே செல்ல முடியாத வகையில் நுழைவாயில் கதவை அடைத்தனர். அப்போது சார்பதிவாளர் இந்துமதி அலுவலகத்தில் இருந்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் சார்பதிவாளர் இந்துமதியின் அறை மற்றும் அலுவலர்களின் அறை, டேபிள் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். மேலும் அங்கிருந்த அலுவலர்களிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர்.
இதனை தொடர்ந்து அலுவலகத்தில் உள்ள மேஜை, பீரோ உள்ளிட்ட அலுவலகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முதல் கட்டமாக 62,000 ரூபாய் ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஐந்து மணி நேரத்தை கடந்து நள்ளிரவிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை தொடர்ந்தது.