சென்னை:

டந்த ஒரு வருடமாக தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருந்து சாதனை படைத்துள்ளார் வித்யாசாகர்.

கே.ரோசய்யா, கடந்த 2011 ஆகஸ்ட் 31ம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார். அவரது பதவிக்காலம் 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதியுடன் நிறைவுபெற்றது.

கடந்த வருடம் பொறுப்பு ஆளுநராக பதவியேற்ற பிறகு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் வாழ்த்து பெரும் வித்யாசாகர்

இதையடுத்து தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக  மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.வித்யாசாகர்  மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். (கடந்த 2014 ஆகஸ்ட் மாதம் முதல்  வித்யாசாகர்  மகாராஷ்டிர மாநில அளுநராக  பணியாற்றி வருகிறார்.)

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு, முழு நேர ஆளுநர் நியமிக்கப்படுவார் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஏனெனில் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. மேலும் அதிக வரி வசூல் ஆகும் மாநிலங்களின் பட்டியலிலும் தமிழகம் உண்டு.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதி வித்யாசாகர் ஆளுநராக பதவி ஏற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பி.எஸ். முதல்வர் ஆனார். பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்று தொடர்கிறார்.

இடையில் தமிழகத்தில் பெரும் அரசியல் சிக்கல்கள் ஏற்பட்டன. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஆளும் அ.தி.மு.க. இரு அணிகளாக உடைந்தது. இன்றளவும் அரசியல் பரபரப்பு உள்ள மாநிலமாக தமிழகம் தொடர்கிறது.

ஆனால் மிக முக்கியமான தருணங்களில் கூட ஆளுநரின் வரவை எதிர்பார்த்து தமிழக முக்கிய பிரமுகர்கள் காத்திருப்பது வழக்கமாகிவிட்டது.

சுதந்திர இந்தியாவில் ஒரே நேரத்தில் இரு மாநில பொறுப்புகளை நீண்டகாலம் (ஒருவருடம்) வகித்தவர் என்ற சாதனையை வித்யாசாகர் படைத்துள்ளார்.

“இந்த சாதனைக்கு முக்கிய காரணம் மத்திய பாஜக அரசுதான்” என்று கிண்டலாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.