சென்னை: நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதால், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி, தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெறுகின்றன.
18வது மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், 4 முனை போட்டி நிலவியது. திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என களத்தில் இறங்கின. திமுகவுடன் பெரும்பாலான கட்சிகள் கூட்டணி சேர்ந்த நிலையில், அதிமுகவுடன் தேமுதிகவும், பாஜகவுடன் பாமகவும் இணைந்துக ளம் கண்டன. ஆனால், திமுக கூட்டணி மட்டுமே 40 தொகுதிகளையும் அள்ளியது.
jமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளையும் திமுக தலைமையிலான கூட்டணி கைப்பற்ற, 2-ம் இடத்தில் அதிமுக பாஜக உள்ளது. அதிமுக 28 தொகுதிகளையும், பாஜக 11 தொகுதிகளிலும் இரண்டாவது இடம் பிடித்துள்ளது. மூன்றாம் இடத்தை பொறுத்தவரை, 22 தொகுதிகளில் பாஜகவும், 6 தொகுதிகளில் நாம் தமிழர்கட்சியும், 11 தொகுதிகளில் அதிமுகவும் இடம்பிடித்துள்ளது. இருப்பினும், இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவிகிதமும் எதிர்பார்த்த அளவில் அதிகரித்து உள்ளது. குறிப்பாக, மதுரை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் இரண்டாம் இடம் பிடித்து அதிமுகவை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி அந்தக் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளில் மதுரை கிழக்கு, மதுரை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளில் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இதுவரை அங்கீகாரம் பெறாமல் இருந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் போன்ற கட்சிகள் இந்த முறை பெற்றுள்ள வாக்குகளினால், தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுகின்றன.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் விசிக திமுக கூட்டணியில் போட்டியிட்டாலும் தனிச்சின்னமான பானை சின்னத்தில் 2 தொகுதிகளில் களமிறங்கி, அந்த 2 தொகுதிகளையும் கைப்பற்றியது அதன்படி, விழுப்புரம் சிதம்பரத் தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. மேலும் வாக்கு சதவிகிதமும் உயர்ந்துள்ளது. இதனால், விசிகவுக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரம் கிடைப்பதில் சந்தேகமில்லை. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஒரேஒரு தொகுதியில் மட்டுமே தனிச்சின்னத்தில் போட்டியிட்டதால், அங்கீகாரம் பெற முடியாத நிலையில், இந்தமுறை அங்கீகாரம் பெறுகிறது.
அதுபோல நாம் தமிழர் கட்சியும் இந்த முறை தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெறுகிறது. இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி மட்டுமே தனித்து போட்டியிட்டு வந்த நிலையில், இந்த தேர்தலிலும் தனித்தே போட்டியிட்டு, முக்கிய அரசியல் கட்சிகளுக்கு டஃப் கொடுத்துள்ளது. பல இடங்களில் அதிமுக, பாஜகவை பின்னுக்கு தள்ளி 2வது மற்றும் 3வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. இதன்மூலம் 8.19 சதவிகித வாக்குகள் பெற்றுள்ளது.
கடைசியாக நடந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றிருந்தது. 12 நாடாளுமன்ற தொகுதிகளில் ஒரு லட்சத்துக்கு மேல் வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற குறைந்த பட்சம் 8% வாக்குகள் தேவை எனும் பட்சத்தில், நாம் தமிழர் கட்சி 8.19 சதவிகிதம் பெற்றுள்ளதால், தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறுவதில் எந்தவிந்த சிக்கலும் இல்லை.