‘’சில்க்’ ஸ்மிதா’ வேடத்தில் நடிக்க வேண்டாம் என பயமுறுத்தினார்கள்’’ -மனம் திறந்த வித்யா பாலன்

பிரபல இந்தி நடிகை வித்யா பாலன் நடிப்பில் வெளியான ‘DIRTY PICTURE’  திரைப்படம்  2011 ஆம் ஆண்டு தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகி  பணத்தை அள்ளியதோடு, விருதுகளையும் குவித்தது.

நம்ம ஊர் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்ன இந்த படத்தில் , சில்க் ஸ்மிதா  கேரக்டருக்கு உயிர் கொடுத்திருந்தார், வித்யா பாலன்.

இந்த படத்துக்காக அவர் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை தட்டிச்சென்றார்.

‘டர்ட்டி பிக்சர்’ குறித்து வித்யா பாலன்,  சில சுவாரஸ்யமான தகவல்களைச் செய்தியாளர்களிடம் பகிர்ந்துள்ளார்.

அதன் சுருக்கம்:

‘’டர்ட்டி பிக்சர் படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொண்டபோது பலர் என்னைப் பயமுறுத்தினார்கள்.

சில்க் ஸ்மிதாவின் கேரக்டரிலா நடிக்கிறாய்? நீ எங்கள் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் மாதிரி இருக்கிறாய். இந்த படத்தில் எல்லாம்  நடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர்.

என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்டேன். அவர்கள் சினிமாவுக்கு எந்த சம்மந்தமும் இல்லாதவர்கள்.’’ நீ என்ன நினைக்கிறாயோ அதைச் செய்’’ என்று கூறி விட்டனர்.

அப்போது தான் சில்க் ஸ்மிதா கேரக்டருக்கு ஒரு ஜீவனை கொடுக்க வேண்டும் என்று அர்ப்பணிப்புடன் உழைத்தேன். இயக்குநர் மிலன் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. படம் நிச்சயம் மோசமாக இருக்கப்போவதில்லை என்று நினைத்தேன்.  நினைத்த மாதிரி, நல்ல பெயர் கிடைத்தது. படமும்  வெற்றி அடைந்தது’’ என்று சிலாகிக்கிறார், வித்யா பாலன்.

-பா.பாரதி.