கொல்லம்:

கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும்படி நடிகர் விஜய் கோரிக்கை விடுத்த நிலையில், கேரள மாநில ரசிகர்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப்பொருட்கள் உள்பட நிவாரணப் பொருட்களை வழங்கி அசத்தினர்.

மேலும், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நிவாரணப் பொருட்களை அங்குள்ள திரையரங்குகளில் சேகரித்து, மாவட்ட ஆட்சியர் மூலம் நிவாரண முகாம்களுக்கு  வழங்கினர்.

கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப்போட்ட கடும் மழை வெள்ளத்தின்போதும், நடிகர் விஜய் ரசிகர்கள் களத்தில் இறங்கி நிவாரண பணிகளை மேற்கொண்ட நிலையில், இந்த ஆண்டும் விஜய் ரசிகர்கள் நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

கொல்லம் வட்டார விஜய் ரசிகர்கள் மன்றம் சார்பில், அந்த பகுதி மக்களிடம் இருந்து நிவாரணப் பொருட்கள் பெறப்பட்டு, அங்குள்ள திரையரங்கில் சேமித்து வைத்து, அதை மாவட்ட கலெக்டர் மூலம் தேவையான பகுதிகளுக்கு வழங்கி அசத்தினர். மேலும் பல இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று  அவர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் நிவாரண பொருட்களை வழங்கி உதவினர்.

இதுகுறித்து கேரள விஜய் கொல்லம் நண்பன்ஸ் அமைப்பைச் சேர்ந்த, முரளி கணேஷ் கூறும்போது, “ நாங்கள் கொல்லத்தில் மட்டும் ஐந்து திரையரங்குகளில் நிவாரணப் பொருட்களைச் சேகரித்துள்ளோம். நிவாரணப் பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதாக கிடைக்குமாறு ஏற்பாடு செய்துள்ளோம். ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இல்லாத விஜய் ரசிகர்கள் இதில் உதவினர்” என்று தெரிவித்துள்ளார்.