டெல்லி: ஐசிஐசிஐ வங்கிக்கடன் மோசடி வழக்கில் ஏற்கனவே வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் அவரது கணவர் தீபக் கோச்சார் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வேணுகோபால் தூத் கைது செய்யப்பட்டு உள்ளார்.

நாட்டின் மிகப்பெரும் தனியார் வங்கிகளில் ஒன்றான, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக  ராஜஸ்தானைச் சேர்ந்த சாந்தா கோச்சார் என்பவர் கடந்த , 2009 முதல் 2018 வரை இருந்தார். அப்போது,  அவர் முறைகேடு செய்யும் வகையில் , ‘வீடியோகான்’ குழுமத்துக்கு விதிமுறைகளை மீறி 3,250 கோடி ரூபாய் கடன் வழங்கி, பின்னர் வீடியோகான் நிறுவனம் திவாலாகி விட்டதாக அறிவிக்கப்பட்டது.   இந்த ஊழல் குற்றச்சாட்டு உறுதியானதை தொடர்ந்து சந்தா கோச்சார், 2018ல் பணிநீக்கம் செய்யப்பட்டார்

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தியதில், இந்த கடன் விவகாரத்தில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வீடியோக்கான் நிறுவனத்தில் இருந்து சாந்தா கோச்சார் கணவர் தீபக் கோச்சார் நிறுவனத்துக்கு பல கட்டங்களாக பணம் டிரான்ஸ்பர் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து,  சாந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சார் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், அவர்களின் சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம், (டிசம்பர் 24ந்தேதி)  இந்த விவகாரத்தில் சாந்தா கோச்சார், தீபக் கோச்சார்  கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், இன்று வழக்கு தொடர்பாக வீடியோகான் குழுமத்தின் உரிமையாளர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது.

லோன் மோசடி வழக்கு: ஐசிசிஐ வங்கி முன்னாள் சிஇஓ சாந்தா கோச்சார் கணவர் தீபக் உடன் கைது